டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி

 
இந்தியா

ஞானேஷ் குமாருக்கு எதிராக காந்தி நினைவிடத்தில் போராட்டம்: ராகுல் காந்தி அறிவிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமர்ந்து போராட்டத்ததில் ஈடுபட உள்ளதாக இண்டியா கூட்டணி எம்பிக்கள் சார்பில் ராகுல் காந்தி அறிவித்துள்ளனர்.

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில், தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்பிக்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக இண்டியா கூட்டணி நேற்று (புதன்கிழமை) அறிவித்தது. எனினும், அவர்கள் அங்கு செல்ல விடாமல் டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் போராட்டம் நடத்த இண்டியா கூட்டணி முடிவு செய்து அறிவித்துள்ளது. இது தொடர்பான இண்டியா கூட்டணி எம்பிக்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்புகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த போராட்டத்தை நடத்த எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் தேர்தல் ஆணையத்துக்கு முன்பாகவும், அடுத்த நாள் ஜந்தர் மந்தர் அருகிலும் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டனர்.

உண்மை என்னவென்றால், நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் மற்றும் மோகன் பாகவத் ஆகியோர் ஒரு குற்றச் சதி மூலம் இந்தியாவை கைப்பற்றி அரசியலமைப்பை சிதைத்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவே எங்கள் உறுதிமொழி” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT