இந்தியா

இண்டியா கூட்டணி கூட்டம்: ஆம் ஆத்மி புறக்கணிப்பு; மம்தா, அகிலேஷ், வைகோ, திருமாவளவன் பங்கேற்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: டெல்லியில் தொடங்கியுள்ள இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் தமிழகத்திலிருந்து வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். திமுகவை தொடர்ந்து ஆம் ஆத்மியும் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.

இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் தொடங்கியுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், தீபங்கர் பட்டாச்சார்யா, சந்தோஷ் குமார், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, புரட்சிகர சோசலிச கட்சியின் எம்பி பிரேமசந்திரன் உள்ளிட்டோர் இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆன்லைனில் கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.

கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “கூட்டத்துக்குச் சென்ற பிறகுதான் நிகழ்ச்சி நிரல் என்னவென்று முடிவு செய்யப்படும். ஆனால், ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். இப்போது பெண்கள் கூட அவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள். எனவே, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பது அவசியம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT