புது டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி இன்று நடத்தி வருகிறது, இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இன்று ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி நடத்துகிறது.
இந்தப் பேரணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பேரணிக்காக இன்று காலை முதலே மக்கள் கூடத் தொடங்கினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில், டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மின்டோ சாலைக்கு வருவதற்கு முன்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இங்கே பேரணிக்கு வரும்போது, மக்கள் பொருட்களை வாங்க வேண்டும், ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், கன்னாட் பிளேஸிற்கு வந்தபோது, பாஜக ஒவ்வொரு கடையையும் கட்டாயப்படுத்தி மூடியிருப்பதைக் கண்டோம். எனவே, வணிகர்களுக்கு யார் இழப்பை ஏற்படுத்துகிறார்கள், அது எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.