கோப்புப்படம்
புதுடெல்லி: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 என உயர்ந்துள்ள நிலையில், உலக அளவில் ஒப்பிட்டால் இந்தியாவில் அதன் விலை குறைவே என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இவை நேரடி தாக்கம் என்றால் பல்வேறு பொருட்களின் விலை உயர்வினால் உலக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இந்தியாவில் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 என உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.46 உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ.3,283 என தற்போது விற்பனை ஆகிறது.
இந்த விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: மேற்காசிய போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதன் விளைவாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை விநியோகிப்பதற்கான செலவு ரூ.1,600-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இறக்குமதி விலை உடன் தொடர்பு கொண்டது.
விலை உயர்ந்துள்ள சூழலிலும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை காட்டிலும், பொருளாதார ரீதியாக முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில்தான் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை குறைவாக உள்ளது.
போர் சூழலிலும் எல்பிஜி சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு இல்லாத வகையில் இந்தியா சூழலை கையாண்டு வருகிறது. மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் மக்கள் பெற்று வருகின்றனர் என்பதையும் மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.