பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்
புதுடெல்லி: சீக்கியர் படுகொலை நினைவுநாளில் போராட்டம் நடத்துவது நியாயமா என்று ராகுல் காந்தியிடம் பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1984-ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் நினைவுதினம் நவம்பர் 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதேநாளில் டெல்லியில் போராட்டம் நடத்த ராகுல்காந்தி பிடிவாதமாக உள்ளார். இண்டியா கூட்டணி் தலைவர்கள் வேறு நாட்களில் போராட்டம் நடத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் நவம்பர் 1-ம் தேதியில்தான் போராட்டம் நடத்தப்படும் என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவர் சீக்கியர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.