தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் திறந்த வேனில் சென்றனர். படம்: பிடிஐ
புதுடெல்லி: டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக டெல்லி அசோகா சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் நேற்று பிற்பகலில் ஒன்று கூடினர். அங்கிருந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பேருந்து, வாகனங்களில் பாராகம்பா சாலை பகுதிக்குச் சென்றனர்.
இதேபோல சன்சாத் மார்க் பகுதியில் உள்ள இந்திய அரசியலமைப்பு சட்ட மன்றம் பகுதியில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்ட பகுதிக்கு வாகனங்களில் சென்றனர்.
மத்திய டெல்லியின் பாராகம்பா சாலையில் இருந்து பிற்பகல் 4 மணிக்கு உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி தொடங்கியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்றனர். கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேகா போரா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.
பாராகம்பா சாலையில் இருந்து 1.8 கி.மீ தொலைவில் உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது. சுமார் ஒரு கி.மீ. தொலைவை பேரணி கடந்தபோது மண்டி ஹவுஸ் அருகே பகவான் தாஸ் சாலையில் போலீஸார் தடுப்புகளை அமைத்து பேரணியைத் தடுத்து நிறுத்தினர். இரும்பு தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியின் இறுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
பாதி வழியில் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள், போலீஸாருடன் வாதிட்டனர். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல போலீஸார் அனுமதி அளித்தனர். மற்ற தலைவர்கள், தொண்டர்கள் பேருந்துகள், வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இண்டியா கூட்டணியின் தலைவர்கள், சட்ட நிபுணர்கள் பிற்பகல் 4.30 மணிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்துக்கு மனு தாக்கல் செய்வதற்காக சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மாலை 4.30 மணியுடன் மனு தாக்கல் செய்யும் பணி நிறைவடைந்துவிடும். இதனால் மனு தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் சிறப்பு அனுமதியின் பேரில் ரிட் மனு தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதா ராய், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ராத், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பேபி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் முகமது பஷீர் ஆகிய 11 பேர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
எதிர்மனுதாரர்களாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் குறிப்பிடப்பட்டு உள்ளனர். இந்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால தடை விதிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் இண்டியா கூட்டணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எஸ்ஐஆர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொது அரங்கில் வெளியிட வேண்டும். எஸ்ஐஆர் பணி தொடர்பான உத்தரவுகள் சட்டப்பூர்வமானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் படிவம் 6 சட்டப்பூர்வமானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எஸ்ஐஆர் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். என்ன காரணத்துக்காக அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். முறையான நோட்டீஸ் இன்றி வாக்காளர் பெயரை நீக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். எஸ்ஐஆர் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.