புதுடெல்லி: டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் நேற்று மதியம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், காந்தி ஸ்மிருதிக்குச் செல்லும் திட்டத்தை ராகுல் அறிவித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்த செய்தியில், “தற்போது, ‘இண்டியா’ கூட்டணியின் எம்பிக்களும் தலைவர்களும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காந்தி ஸ்மிருதியை நோக்கிச் செல்கிறோம்.
நீட் தேர்வுத் தாள் கசிவுக்குப் பிறகு உயிர் நீத்த மாணவர்களை நினைவுகூரவும், அமைதியான முறையில் போராடி, போலீஸாரின் தடியடியில் காயமடைந்து கிடக்கும் மாணவர்களுடன் துணை நிற்கச் செல்கிறோம். இந்தியாவின் மாணவர்கள் தனியாக இல்லை. முழு எதிர்க்கட்சியும் அவர்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 3 பேருந்துகளில் ஏறி காந்தி ஸ்மிருதிக்கு சென்றனர். முதலில் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டனர். ஆனால், அதற்கு போலீஸார் அனுமதி வழங்காததால் அருகேயுள்ள காந்தி ஸ்மிருதிக்கு (காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடம்) சென்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தனியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து 1.5 கி.மீ சுற்றளவில் மொபைல் இணைய சேவை நேற்று நள்ளிரவு வரை துண்டிக்கப்பட்டது.
பெல்லட் குண்டுகள்
கடந்த 20-ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியில் பெல்லட் (ரப்பர்) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கூறும்போது, “நாடாளுமன்ற பேரணியின்போது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அந்த கண்ணீர் புகைக்குண்டுகளில் பெல்லட் குண்டுகளும் இருந்தன.
இதில் எனது உடல் முழுவதும் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடல் முழுவதும் ரத்தம் வழிந்தது. மருத்துவமனை சிகிச்சையின்போது எனது உடலை துளைத்த பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.