புதுடெல்லி: ‘‘இண்டியா கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஆர்ஜேடி-யின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா கூறுகையில், “இக்கட்டான சூழலில் அவசரமாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். எல்லாம் மக்களின் கைகளில்தான் உள்ளது. ஐசியு-வில் இண்டியா கூட்டணி இருக்கிறது என்றால் அதை உயிர்ப்பிக்க உமர் என்ன முயற்சி எடுத்தார். அவரும் கூட்டணியின் ஓர் அங்கம்தானே’’ என்றார்.
பாஜகவின் மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் கூறுகையில், “உமர் அப்துல்லா தவறாக சொல்லிவிட்டார். இண்டியா கூட்டணி ஐசியு-வில் இல்லை. மக்களவை தேர்தலோடு அது காலமாகி விட்டது. அதற்கு அஞ்சலி செலுத்தலாம். அக்கூட்டணிக்கு தலைவரும் கிடையாது, கொள்கையும் கிடையாது’’ என்றார்.