நிர்மலா சீதாராமன்

 
இந்தியா

“இந்தியாவின் 7.8% ஜிடிபி இந்த ஆண்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி” - நிர்மலா சீதாராமன்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி என்பது ஆண்டின் மீதமுள்ள காலத்துக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணம் ஆஷ்வில்லில் நடைபெறும் ஜி20 கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிர்மலா சீதாராமன், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொலியில், "2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் நாம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் தனித்து நிற்கிறது.

உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே இந்தியா இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளதை இங்கு பங்கேற்கும் அனைவரும் பாராட்டுகின்றனர். இது ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கும் நல்ல அறிகுறியாக அமைந்துள்ளது.

பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி காணப்படுவதால், இது "பரவலான வளர்ச்சி" யாக உள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் 9.2 சதவீத வளர்ச்சியும், நிதி மற்றும் தொழில்முறை சேவைகள் துறையில் 12.1 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது.

இந்திய மக்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து வருவதையும், 2047-ம் ஆண்டிற்கான ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கிய பிரதமரின் தலைமையிலான உத்வேகமான பயணத்தையும் இந்த அனைத்துக் காரணிகளும் காட்டுகின்றன” என்றார்.

ஜூலை-செப்டம்பர் 2026 காலகட்டத்திற்கான அடுத்த காலாண்டு ஜிடிபி மதிப்பீடு நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

SCROLL FOR NEXT