தேபாசிஷ் குமார்
கொல்கத்தா: கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட இரு தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேபாசிஷ் குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் பத்மகூர் சாலையில் உள்ள இவரது வீடு, மோதிலால் நேரு சாலையில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இதுபோல் தெற்கு கொல்கத்தாவில் குமார் சாகா என்ற மற்றொரு தலைவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகளுக்கு எதிராக திரிணமூல் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினரான தேபாசிஷ் குமார், கொல்கத்தா மாநகராட்சி செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். கடந்த வாரம் நில அபகரிப்பு தொடர்பான தனிப்பட்ட வழக்கில் தேபாசிஷ் குமாரை அமலாக்கத் துறை 2 முறை விசாரித்தது. மேலும் 7 இடங்களில் சோதனை நடத்தியது.
வருமான வரி சோதனை குறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய் பிரகாஷ் மஜும்தார் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ளது. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் அனைத்து மத்திய அமைப்புகள், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய படைகளை தங்களுடன் அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் இல்லாதது மக்கள் ஆதரவு மட்டுமே’’ என்றார்.
பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில், “ஒரு சட்டவிரோத நில ஒப்பந்தத்தில் தேபாசிஷ் குமார் லஞ்சம் பெற்றுள்ளார். ஒட்டுமொத்த திரிணமூல் கட்சியும் ஊழலில் திளைக்கிறது. ஊழல் தலைவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பதே வங்காள மக்களின் விருப்பம்’’ என்று தெரிவித்தார்.