முப்பைடகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் | கோப்புப் படம்
ஹைதரபாத்: நடவடிக்கைகளின் தீவிரம் குறைந்திருக்கலாம்; ஆனாலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என்று முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டார். விமானப் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அனில் சவுகான், “இங்கு தவறு செய்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியம். மேலும், அலட்சியத்தின் விலை மன்னிக்க முடியாதது. ஒரு புதிய இயல்பு நிலை உறுதியாக வேரூன்றியிருக்கும் ஒரு தருணத்தில் நீங்கள் விமானப் படையில் இணைகிறீர்கள்.
இது உயர்மட்ட செயல்பாட்டுத் தயார் நிலையால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தம். நடவடிக்கைகளின் தீவிரம் குறைந்திருக்கலாம்; ஆனாலும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் தயாராகவும் இருக்கும் திறனில்தான் நமது பலம் அடங்கியுள்ளது.
வெற்றியை ஒரு பழக்கமாக்கிக் கொள்வது இந்த புதிய இயல்பு நிலையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். போர்கள் வெறும் சொல் ஆற்றலால் வெல்லப்படுவதில்லை. மாறாக, நோக்கமுள்ள செயல்களால் வெல்லப்படுகின்றன’’ என தெரிவித்தார்.
முன்னதாக, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விமானப் பயிற்சி அதிகாரிகளின் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நடத்தப்பட்டது.