பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் பஞ்சாபின் ஆளும் கட்சி எம்எல்-ஏக்களும் கட்சி தாவும் அபாயம் உருவாகி வருகிறது. இது, ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததன் தாக்கமாகக் கருதப்படுகிறது.
டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் ஏழு பேர் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஒருங்கிணைந்தனர். ராகவ் சத்தா, சந்தீப் பதக், ஸ்வாதி மாலிவால், அசோக் மிட்டல் உள்ளிட்ட இந்த 7 பேரும் பாஜகவில் இணைந்தனர். இந்தக் கிளர்ச்சியின் தாக்கம் மக்களவை மற்றும் பஞ்சாப் சட்டபேரவையிலும் ஆம் ஆத்மிக்கு எதிராக குரல் ஒலிக்கும் சூழல் உருவாகி வருகிறது.
மக்களவையில் ஆம் ஆத்மிக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசில் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களிலும் பலர் ஆம் ஆத்மியை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இவர்கள் அனைவரையும் கட்சியில் தக்க வைப்பது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பெரும் சவாலாகிவிட்டது.
இதனால் ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் ராஜ்குமார் சப்பேவால் (ஹோஷியார்பூர்), குர்மீத் சிங் ஹேயர் (சங்ரூர்), மல்விந்தர் சிங் காங் (அனந்த்பூர் சாஹிப்) ஆகியோர் கட்சி தாவும் பட்டியலில் முன்னணியில் உள்ளனர். வரும் சில மாதங்களில், இவர்கள் பாஜகவில் இணையலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிவிட்டது. இதனால், அதன் தலைவர்கள் ஒவ்வொருவராக தற்போது கட்சியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர்" என்றார்.
கடந்த 2022 தேர்தலில், பஞ்சாப் சட்டப்பேரவையின் 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், மாநிலங்களவை எம்பிக்கள் 7 பேர் ஆம் ஆத்மியை விட்டு விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்களில் ராகவ் சத்தாவும் சந்தீப் மிட்டலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வரலாற்று வெற்றியின் சிற்பிகளாக திகழ்ந்தனர்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வது எளிதாக இருக்காது எனத் தெரிகிறது. இது உடனடியாக இல்லாவிட்டாலும், குறைந்தது அடுத்த சில மாதங்களில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு சவாலாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் பகவந்த் மான், "பஞ்சாபில் எங்கள் கட்சி ஒற்றுமையுடன் உள்ளது. எனது அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை" என தெரிவித்துள்ளார்.