கொல்கத்தா: வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கொல்கத்தா வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக அப்போது அவர் தெரிவித்தார்
'செக்யூலர் மிஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ்' (Secular Mission and Human Rights) மற்றும் 'பங்களாதேஷ் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் ஃபவுண்டேஷன்' (HRBFF) ஆகிய அமைப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. கொல்கத்தாவின் ரவீந்திர சதனில் நடைபெற உள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வந்துள்ளார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகுந்த புன்னகையுடன் செய்தியாளர்களைச் சந்தித்த தஸ்லிமா நஸ்ரின், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும், கைகளைக் கூப்பியும், அசைத்தும் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
தஸ்லிமா நஸ்ரின் உடன் இருந்த செக்யூலர் மிஷன் அமைப்பின் தலைவர் ஒஸ்மான் கனி மாலிக், “கடந்த 2007ம் ஆண்டு மிகுந்த துயரத்துடன் சகோதரி தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவை விட்டு வெளியேறினார். எங்கள் அன்புக்குரிய எழுத்தாளரை முழு மரியாதையுடன் மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வர தற்போதுதான் எங்களால் முடிந்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள்.
தற்போது மேற்கு வங்கம் சுதந்திரமாக உள்ளது. தஸ்லிமா நஸ்ரினை இங்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பையும் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு மிக்க நன்றி. பாதுகாப்பு மட்டுமல்லாது மேலும் பல வழிகளில் அவர் எங்களுக்கு உதவி இருக்கிறார்.” என தெரிவித்தார்.
பெண் உரிமை மற்றும் மதம் சார்ந்த தனது எழுத்துகளுக்காக வங்கதேசத்தில் கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தஸ்லிமா நஸ்ரின், கடந்த 1994-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் குடியுரிமை பெற்ற அவர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் வங்கத்துடனான தனது உணர்வுப்பூர்வமான பிணைப்பைப் பற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். தனது மொழி, கலாச்சாரம், இலக்கிய பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் நகரமாக கொல்கத்தா உள்ளதைக் குறிப்பிட்டு தான் அங்கு வாழ விரும்புவதாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.
இதையடுத்து, புதுப்பிக்கக்கூடிய வகையிலான வசிப்பிட அனுமதியை மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு அவருக்கு வழங்கியது. இதையடுத்து, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினார்.
மேற்கு வங்கத்திலும் வங்கதேசத்திலும் பகிரப்படும் இலக்கிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். இதனால் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார். அவர் எழுதிய த்விகண்டிதோ என்ற புத்தகத்தை அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு தடை செய்தது. எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது.
அவரது எழுத்துகளுக்கு எதிராக 2007-ல் நடந்த போராட்டங்கள் தீவிரமடைந்து கலவரமாக மாறியதை அடுத்து, அவர் கொல்கத்தாவில் இருந்து ரகசியமாக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசின் பாதுகாப்போடு ரகசிய இடத்தில் அவர் தங்கவைக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் புதுடெல்லிக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, 2008-ல் இந்தியாவை விட்டு ஸ்வீடன் சென்ற தஸ்லிமா நஸ்ரின், பின்னர் நீண்ட கால விசாவில் இந்தியா திரும்பினார். எனினும், மேற்கு வங்க அரசு அவரை அனுமதிக்காததால் அவர் டெல்லியிலேயே தங்க வேண்டியிருந்தது. இந்நிலையில், 19 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கொல்கத்தா திரும்பி உள்ளார்.