காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

 
இந்தியா

“கல்வியறிவு பெற்ற கேரள மக்களை குஜராத் போல ஏமாற்ற முடியாது” - கார்கே பேச்சு

பாஜக கடும் எதிர்வினை

வேட்டையன்

இடுக்கி: கல்வியறிவு பெற்ற கேரள மக்களை கல்வியறிவு பெறாத குஜராத் மக்களைப் போல ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதில் வரும் 9-ம் தேதி அன்று கேரளா, அசாம் மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இந்தப் பகுதிகளில் மிகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

          

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரள மக்களை தவறாக வழிநடத்தலாம் என எண்ண வேண்டாம். அவர்கள் புத்திசாலிகள், கல்வியறிவு பெற்றவர்கள். பிரதமர் மோடியும், முதல்வர் பினராயி விஜயனும் கல்வியறிவு பெறாத குஜராத் அல்லது பிற பகுதியில் உள்ள மக்களை ஏமாற்றலாம். ஆனால், அது கேரள மக்களிடத்தில் முடியாது” என்றார்.

பாஜக கடும் எதிர்வினை: கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநில துணை முதல்வர் ஹர்ஷ் சிங்வி எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “தேசம் காந்தி, சர்தார் படேலை பெற்றது குஜராத் மண்ணில் இருந்துதான். தேசத்தின் மிகப் பிரபலமான பிரதமரை நரேந்திர மோடியை வழங்கியதும் குஜராத் மண்தான். நீங்கள் 6 கோடி குஜராத் மக்களை அவமதித்து உள்ளீர்கள்.

குஜராத் மீது இவ்வளவு வெறுப்பு ஏன்? மீண்டும் மீண்டும் குஜராத் மக்களை இப்படி இகழ்வது ஏன்? குஜராத் மக்கள் உங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றினர். அதற்கு இப்படி பழிவாங்குகிறீர்களா? இந்தப் பேச்சு விரக்தி அல்ல. இது உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியை குஜராத் மக்கள் புறக்கணித்து வருகின்றனர். அது வருங்காலத்திலும் தொடரும். குஜராத் உங்களை மன்னிக்காது” என அதில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலை முன்னெடுத்துள்ளது. நிச்சயம் இதற்கான பதிலடியை அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தருவார்கள் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT