இந்தியா

“தேவைப்பட்டால் டெல்லி சென்று சிஜேபி போராட்டத்தில் கலந்துகொள்வேன்” - மம்தா பானர்ஜி

மோகன் கணபதி

கொல்கத்தா: தேவைப்பட்டால் டெல்லி சென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைவரும் இண்டியா கூட்டணியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு எந்த ஈகோவும் இல்லை. மற்றவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றாக போராட முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்பட்டால், டெல்லி சென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்திலும் நான் கலந்து கொள்வேன்.” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வந்த மம்தா பானர்ஜி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளோடு அவர் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி, அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். “துரோகிகள் நேரடியாக பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் சவால் விடுக்கிறேன். நீங்கள் பாஜகவை ஆதரிக்க விரும்பினால், பாஜகவிடம் செல்லுங்கள். உங்களில் எவ்வளவு பேர் வெளியேறுகிறீர்களோ அவ்வளவு நான் மகிழ்ச்சியடைவேன். ஒவ்வொரு காலி இடத்தையும் நிரப்ப மாணவர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அந்த திருடர்கள் பாஜகவிடம் சென்றுவிட்டனர். நான் அவர்களை ஒருபோதும் திரும்ப ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கட்சியின் இரட்டை மலர் சின்னத்தை பறிக்க முயற்சி நடப்பதாகக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் தான் இருப்பதால் அவர்களால் அதைச் செய்ய முடியாது என குறிப்பிட்டார். மேலும், விரைவில் மேற்கு வங்கம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT