ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: “இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக போன்ற கட்சியை தடை செய்திருப்பார்” என்று ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அசோக் கெலாட், “இன்றைய சூழல் மிகவும் அபாயகரமானது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடைய 50 ஆண்டு கால பொது வாழ்வில் இத்தகைய ஆபத்தை பார்த்தது இல்லை. இதனை இங்குள்ள மூத்தவர்களும் ஏற்பார்கள் என கருதுகிறேன். நம் தேசம் இனியும் விழித்துக் கொள்ளவில்லை என்றால், இதன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க வேண்டிய சூழல் வரும்.
நமது இளம் தலைமுறையினருக்கு எதிர்காலம் என்பதே இருக்காது. அதனால்தான் அவர்களின் பொறுப்பு என்பது இன்று மிகவும் முக்கியம். இதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்த தேசத்தில் என்ன நடக்கிறது என்று நாளைய தலைமுறையினர் அவர்களை நோக்கி கேள்வி கேட்பார்கள்.
காங்கிரஸ் கட்சியின் வரலாறு மிகவும் நீண்டது. தேசத்துக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் உயிரை கொடுத்துள்ளனர். ஆனால், இன்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் நாட்டை பலவீனப்படுத்துவது குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். நம் நாட்டின் அரசமைப்பு சட்டம் அனைத்து மதம், சமூகங்களுக்கு சமமான உரிமைகளை வழங்குகிறது. அத்தகைய சூழலில், மதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்த கூடாது.
ஆனால், 403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் கூட இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்த ஆளுங்கட்சி முன்வரவில்லை. அதன்மூலம் தங்களை இந்துத்துவ கட்சி என பிரகடனம் செய்கின்றனர். பாஜகவை ஆதரித்து பேசிய முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர் எல்லாம் இன்று வீட்டில் உள்ளனர்.
இந்துத்துவா என்ற ஒற்றை முழக்கத்தின் மூலம் மக்களின் ஆதரவு பெற்று, ஆட்சி செய்யலாம் என எண்ணுபவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால், பாஜக போன்ற கட்சியை நிச்சயம் தடை செய்திருப்பார். ஏனெனில், மதத்தின் பெயரால் அரசியல் செய்ய கூடாது. ஆனால், இன்று அது வெளிப்படையாக நடந்து வருகிறது.
தேசம் முழுவதும் இந்த போக்கு உள்ளது. யாரும் மதத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து இங்கு பேசுவதில்லை. அதன் விளைவு தான் இன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்வி எழ காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.