பெங்களூரு: வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க இந்திய விமானப்படை, சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானப்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு மையம் (எஸ்டிஐ) ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்துவதிலும், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்குவதிலும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான நடவடிக்கை. இந்த ஒப்பந்தத்தில் விமானப்படையின் எஸ்டிஐ பிரிவு கமாண்டன்ட் ஏர் வைஸ் மார்ஷல் குருஹரி, ஐஐடி சென்னை இயக்குனர் டாக்டர் காமகோடி, பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேசன் சிஇஓ டாக்டர். சங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த கூட்டு முயற்சி மூலம் இந்திய விமானப்படை மேம்பட்ட எண்கணித முறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது நெட்வொர்க்கிங் மற்றும் எண்குறியாக்கம் ஆகியவற்றுக்கு பயன்படும்.
இந்த அமைப்பு, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சிறந்த தரவு பரிமாற்றத்துக்கும், நவீன ராணுவ செயல்பாடுகளுக்கும் முக்கியமானது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தகவல் தொடர்பை உருவாக்குவதன் மூலம், வெளிநாட்டு தகவல் தொடர்பு சாதனங்களை சார்ந்திருப்பது குறையும்.
இது குறித்து விமானப்படை கமாண்டன்ட் குருஹரி கூறுகையில், ‘‘சென்னை ஐஐடியுடனான இந்த கூட்டு முயற்சி, பாதுகாப்பு தகவல் தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்தும் தொலைநோக்கு நடவடிக்கை. கல்வியாளர்களும், விமானப்படை நிபுணத்தவமும் ஒன்றிணையும்போது, அது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் விமானப்படையின் வான் தகவல் தொடர்பு மேம்படும்’’ என்றார்.
ஐஐடி சென்னை இயக்குனர் காமகோடி கூறுகையில், ‘‘ விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து செயல்படுவது, உயர் கல்வி நிறுவனங்களும், பாதுகாப்பு படைகளும் இணைந்து செயல்படுவதற்கு உதாரணமாக உள்ளது. மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் பர்பாதுகாப்புக்கு தனது நிபுணத்துவத்தை வழங்குவதில் ஐஐடி சென்னை பெருமிதம் கொள்கிறது. இந்த நடவடிக்கை, தற்சார்பு இந்தியா, நாட்டின் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துத்தல் போன்றவற்றுக்கு பொருத்தமாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு வலுப்பெறும்’’ என்றார்.
ரூ.79,000 கோடியில் தளவாடம் வாங்க ஒப்புதல்: ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படைகளுக்கும் தேவையான ராணுவத் தளவாடங்களை ரூ.79,000 கோடிக்கு கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டன. இதன்படி தரைப்படை பயன்பாட்டுக்காக தற்கொலை ட்ரோன்கள், இலகு ரக ரேடார்கள், பினாகா ராக்கெட் லாஞ்சருக்கான குண்டுகள், ட்ரோன்களை கண்டறிந்து இடைமறித்து தாக்கும் ஆயுதங்களுடன் கூடிய எம்கே-எச் வாகனங்கள் ஆகிய வாங்கப்படும்.
இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக போலார்டு இழுவைபடகுகள், ரேடியோ தகவல் தொடர்பு கருவிகள் வாங்கவும், அதிக உயரத்தில் தொலை தூரம் பறக்கும் ட்ரோன்களை குத்தகைக்கு எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விமானப்படை பயன்பாட்டுக்கு தானியங்கி டேக் -ஆப் மற்றும் லேண்டிங் ரிக்கார்டிங் கருவிகள், அஸ்த்ரா ஏவுகணைகள், தேஜஸ் போர் விமான சிமுலேட்டர், ஸ்பைஸ் - 1000 ஏவுகணைகள் ஆகியவை வாங்கப்படவுள்ளன.