பாரக்பூர்: “மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பாஜக வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. அடுத்ததாக பாஜக அரசின் பதவியேற்பு விழாவுக்காக நான் மீண்டும் மேற்கு வங்கம் வருவேன்” என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்காக மேற்கு வங்க மாநிலம் பராக்பூரில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தின் மீது நான் கொண்டுள்ள பற்று என்பது சக்தி மீதான ஒரு பக்தியாகவே இருந்து வருகிறது.
எனது தனிப்பட்ட ஆன்மிகப் பயணத்தின் ஆற்றல் மையமாக இப்பகுதி திகழ்கிறது. மேற்கு வங்கத்தின் மகத்தான ஆளுமைகளாலும், இங்கு மக்கள் வடிவில் உள்ள கடவுள்களின் அளவற்ற அன்பாலும் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். இந்தப் புண்ணிய பூமியில் நான் பெற்ற அனுபவங்களை, எனக்குக் கிடைத்த ஒரு பெரும் வரமாகவே நான் கருதுகிறேன்.
இந்தத் தேர்தலில் நான் பங்கேற்கும் கடைசிப் பேரணி இதுதான். மேற்கு வங்கத்தில் நான் சென்ற இடமெல்லாம் மக்களின் மனநிலையை மிக உன்னிப்பாகக் கவனித்தேன். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் மீண்டும் இங்கு வர நேரிடும் என்ற முழு நம்பிக்கையுடன் நான் திரும்புகிறேன்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணிகள் மற்றும் சாலைப் பயணங்களின்போது, என் மனம் நெகிழக்கூடிய வகையிலான செய்திகளையும், ஓவியங்களையும் நான் பரிசாகப் பெற்றேன். அவற்றை என்னால் ஒருபோதும் மறக்க இயலாது.
பிரச்சார நிகழ்வுகள் முடிந்த பிறகு, இரவில் தனித்து அமர்ந்து, ஒவ்வொரு ஓவியத்தையும் மிகக் கவனமாகப் பார்வையிடுவேன். அந்த ஓவியங்களை வரைந்த கலைஞர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பேன். உங்கள் செய்திகளையும் கடிதங்களையும் நான் தவறாமல் வாசிப்பேன். சில கடிதங்களில் உங்கள் துயரங்களைப் பார்க்கிறேன். வேறு சிலவற்றில் உங்கள் ஆசீர்வாதங்களை உணர்கிறேன். பின்னர், அவற்றுக்கான எனது பதில்களை மிகச் சிந்தனையுடனும் கவனத்துடனும் பதிவு செய்து அனுப்புவதை நான் உறுதிசெய்கிறேன்.
கடந்த முப்பது முதல் நாற்பது ஆண்டுகளாக, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் நான் பயணம் செய்து வருகிறேன். அரசியலில் நுழைந்து பாஜகவில் இணைந்த பிறகு, ஒரு கட்சித் தொண்டனாகவே நான் பணியாற்றினேன். தேர்தல் பணிகளை மேற்கொள்வது உட்பட, கட்சி எனக்கு இட்ட அனைத்துப் பொறுப்புகளையும் நான் சிரமேற்கொண்டு நிறைவேற்றினேன்.
எனது சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல், உங்கள் அனைவரின் மத்தியில்தான் நான் ஆறுதலையும் அமைதியையும் கண்டடைந்துள்ளேன். நீங்களே எனது குடும்பம்” என்றார் பிரதமர் மோடி.