இந்தியா

‘அரசு பங்களாவை காலி செய்ய மாட்டேன்’ - பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி அடம்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முன்​னாள் முதல்​வர் ராப்ரி தேவி, தான் வசித்து வரும் அரசு பங்களாவை விட்டு வெளி​யேற மாட்​டேன் என்று தெரிவித்​துள்​ளார்.

பிஹார் முன்​னாள் முதல்​வரும் ஆர்​ஜேடி மூத்த தலை​வரு​மான ராப்ரி தேவி, பாட்​னா​வில் ஆளுநர் மாளிகை அரு​கில் 10, சர்​குலர் ரோடு முகவரி​யில் உள்ள அரசு பங்​களா​வில் வசித்து வரு​கிறார். முன்​னாள் முதல்​வர் என்ற அடிப்​படை​யில் நிதிஷ் குமார் தலைமையி​லான முந்​தைய அரசால் 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்த வீடு அவருக்கு ஒதுக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், பாஜகவைச் சேர்ந்த சாம்​ராட் சவுத்ரி தலைமையிலான புதிய அரசு பொறுப்​பேற்​றுள்​ளது. இதையடுத்து, கட்​டிட கட்​டு​மானத் துறை மே 27 தேதி​யிட்ட உத்தரவின் மூலம், ராப்ரி வசிக்​கும் பங்​களாவை அமைச்​சர் நந்த் கிஷோர் ராமுக்கு ஒதுக்​கி​யுள்​ளது.

இது குறித்து ராப்ரி தேவி​யிடம் செய்​தி​யாளர்​கள் நேற்று கேட்​ட​போது கடும் கோபமடைந்​தார். அப்​போது அவர் கூறும்​போது, ‘‘சம்​ராட் சவுத்ரி முதல்​வ​ரான​தில் மிக​வும் உற்​சாக​மாக இருக்​கிறார். அவரது அரசு என்னை அரசு பங்​களா​வில் இருந்த பலவந்​த​மாக வெளி​யேற்​றட்​டும். நான் காலி செய்​யப் போவ​தில்​லை‘‘ என்றார்.

சட்ட மேலவை எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருக்​கும் ராப்ரி தேவியை, கடந்த ஆண்டு நவம்​பரிலேயே வீட்டை காலி செய்யுமாறு அரசு கேட்​டுக் கொண்​டது. அப்​போது அது அப்​போதைய துணை முதல்​வர் விஜய் குமார் சின்​ஹாவுக்கு ஒதுக்கப்பட்​டது. ஆனால், ராப்ரி தேவி மறுத்​த​தால் சின்​ஹா​வால் அங்கு மாற முடிய​வில்​லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT