மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

 
இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பீட்டில் ஓஎஸ்எம் சர்ச்சை - ‘பொறுப்பேற்கும்’ தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

மோகன் கணபதி

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் டு தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதிப்பிடும் செயல்முறையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் யாரும் தப்ப முடியாது என உறுதியளித்துள்ளார்.

டிஜிட்​டல் விடைத்​தாள் மதிப்​பீட்டு (On Screen Marking - OSM) முறை​ப்படி மதிப்பெண் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டதில் அதன் பிரதிகள் மங்கலாக உள்ளதாகவும், சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டதாகவும், இணையதளம் செயலிழப்பதாகவும், கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகவும், மறுமதிப்பீட்டு செயல்முறையிலும் குழப்பங்கள் இருப்பதாகவும் சிபிஎஸ்இ முறையில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், “ஓஎஸ்எம் முறை​யிலான மதிப்பீட்டில் மாணவர்களின் மதிப்​பெண்கள் குறைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். இது சரிசெய்யப்படும்; தீர்வு காணப்படும். நாங்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்வு எழுதிய 17 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம்.

ஓஎஸ்எம் முறை என்பது உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு முற்போக்கான முறை. இது மாணவர்களை மையமாகக் கொண்டது. மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம், தங்கள் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படையான தகவல்களை அவர்கள் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

ஓஎஸ்எம் முறை அரசின் விதிகளுக்கு உட்பட்டே நடைபெற்றுள்ளது. இதில், ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட யாரும் தப்ப மாட்டார்கள். இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளது குறித்து கேட்கிறீர்கள். அரசியலை நாம் பின்னர் வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் மாணவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதே மிக முக்கியம். மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான கருத்துகளை அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வெளியிட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறி​விப்பில், ‘பிளஸ் 2 தேர்வு எழு​திய மாணவர்கள் பலர் தங்கள் மதிப்​பெண்​கள் குறித்து மிகுந்த வருத்​தத்​துடன் இருப்​ப​தாக​வும், அதற்கு புதி​தாக அறிமுகப்படுத்​தப்​பட்ட ஓஎஸ்எம் முறையே காரணம் என்று கருது​வ​தாக​வும் சமூக வலை​தளங்​கள் வழி​யாக தகவல்​கள் வரு​கின்​றன.

மாணவர்​கள் நலனில் சிபிஎஸ்இ எப்​போதுமே அக்​கறை கொண்​டுள்​ளது. புதி​தாக அறி​முகம் செய்​யப்​பட்ட ஓஎஸ்எம் நடை​முறை​யானது, அனுபவ​மிக்க ஆசிரியர்​கள் தயாரித்த மதிப்​பீட்டு திட்​டத்​தின் அடிப்​படை​யில், ஒரே மாதிரி​யான மற்​றும் சீரான மதிப்​பீட்டை உறு​தி​செய்​யும்.

மேலும் அந்த மதிப்​பீட்​டில் மாற்று முறை​களில் எழுதப்பட்ட பதில்​களுக்​கும், மதிப்​பெண் பெறும் வகை​யில் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

எனினும் மாணவர்​களுக்கு தங்​கள் தேர்வு முடி​வில், திருப்தி இல்​லை​யெனில், மறுகூட்​டல், திருத்​தப்​பட்ட விடைத்​தாள்​களைப் பார்​வை​யிடு​தல் மற்​றும் மறும​திப்​பீடு கோரலாம்.

தேர்வு முடிவு​கள் தொடர்​பாக, கவலை அடைந்​துள்ள மாணவர்​களுக்கு இலவச ஆலோ​சனை சேவை​யும் 1800-11-8004 என்ற தொலைபேசி வழி​யாக வழங்​கப்​படு​கிறது. மேலும் resultcbse2026@gmail.com என்ற மின்​னஞ்​சல் வாயி​லாக​வும் மாணவர்​கள் தொடர்பு கொள்​ளலாம்’​ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறை என்றால் என்ன?

மாணவர்கள் விடைத்தாள்களை ஆசிரியர்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் காப்பிகளை கணினியில் பார்த்து மதிப்பீடு செய்யும் முறையாகும். மதிப்பீடு செய்யும் முறைதான் மேனுவலில் இருந்து கணினி வழியாக மாறுகிறதே தவிர மதிப்பெண் வழங்கும் முறையும், மதிப்பீட்டு விதிகளும் அதேநிலையில் தான் தொடர்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்படி முதலில் மாணவர்களின் விடைத்தாள்கள் முதலில் ஸ்கேன் செய்யப்படுகிறது. ஸ்கேன் செய்யும்போது மாணவர்களின் அடையாளம் தெரியாதவண்ணம் ரகசியம் காப்பது உறுதி செய்யப்படுகிறது. பின்னர் அந்த ஸ்கேண்டு விடைத்தாள் பிரதி பல்வேறு பிராந்தியங்களிலும் நியமிக்கப்பட்ட பல்வேறு மதிப்பீட்டாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பகிரப்படுகிறது.

இவ்வாறாக ஆன்லைனில் விடைத்தாள் திருத்துவது என்பது துல்லியத் தன்மையை உறுதி செய்யும். கூட்டல் மற்றும் அட்டவணைப்படுத்தல் பிழைகளைக் குறைப்பதன் மூலம், மதிப்பிடுவதில் துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும். இதுவே, இந்த முறையின் நோக்கம் என்று சிபிஎஸ்இ கூறுகிறது.

மேலும், ஓஎஸ்எம் முறை, மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதாகவும், நிர்வாகச் சுமையைக் குறைப்பதாகவும் சிபிஎஸ்இ தேர்வு வாரியம் கூறுகிறது.

SCROLL FOR NEXT