பிரிவு உபச்சார விழாவில் பேசிய பி.ஆர்.கவாய்

 
இந்தியா

“முழு திருப்தியுடன் நீதியின் மாணவனாக விடைபெறுகிறேன்” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உருக்கம்

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக 40 ஆண்டு கால பயணத்தை முடித்துக்கொண்டு முழு திருப்தி மற்றும் மனநிறைவுடன் விடைபெறுவதாகவும், நீதியின் மாணவனாக விடைபெறுவதாகவும், தனது கடைசி வேலை நாளான நேற்று (நவம்பர் 21) நடந்த பிரிவு உபச்சார விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார்.

நேற்று மாலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (SCBA) நடத்திய பிரிவு உபச்சார விழாவில் உரையாற்றிய 52வது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கிரீமிலேயர் தீர்ப்புக்காக தனது சொந்த சமூகத்தினரிடமிருந்து எதிர்கொண்ட கோபத்தை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பின் தீவிர மாணவனாக, சமத்துவம், நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமானவை. அமராவதியில் ஒரு எளிய பின்னணி மற்றும் அதிகம் அறியப்படாத இடத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய என் பயணத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.

டெல்லியில் ஒரு சிறந்த பள்ளியில் படிக்கும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகனை ஒரு விவசாயியின் மகனுடன் போட்டியிட வைக்க முடியும் என்பதற்கு நான் ஓர் உதாரணம். நான் கடைசியாக இந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும்போது, இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது, ​​முழு திருப்தி உணர்வுடன், இந்த நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் என்ற முழு மனநிறைவுடன் விடை பெறுகிறேன்.

அரசியலமைப்பு எப்போதும் நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது எப்போதும் பரிணாம வளர்ச்சி அடையும். எனவே, நீதிமன்றங்கள் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒரு வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோது, இதை ஒரு அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கும், தேசத்திற்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பாக நம்பினேன்.” என்றார்.

மே 14 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இதன்படி நேற்று (நவம்பர் 21) அவரது கடைசி வேலை நாளாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூர்ய காந்த் நவம்பர் 24 அன்று பதவியேற்கிறார்.

SCROLL FOR NEXT