பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

 
இந்தியா

“நான் இப்போது முதல்வர்... அனைவருக்கும் பொதுவானவன்!” - சுவேந்து அதிகாரி

மோகன் கணபதி

கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.

ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.

தேர்தலின்போது பல்வேறு மோதல்கள் நிகழ்ந்த நிலையில், முதல்வராக உங்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுவேந்து அதிகாரி, “டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு (பாஜக) வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல்வராக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்.

மேற்கு வங்கம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. கல்வி சீர்குலைந்துள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. நாங்கள் மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். எங்கள் தோள்களில் மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக - திரிணமூல் காங்கிரஸ் இடையேயும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயும் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், சுவேந்து அதிகாரியின் எதிர்கால செயல்பாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் அனைவருக்கும் போதுவான நபர் என அவர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பொரும்பான்மையுடன் கூடிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவர் சுவேந்து அதிகாரி.

பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சவேந்து அதிகாரி, இன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சுவேந்து அதிகாரியுடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், நிஷித் ப்ரமாணிக், அஷோக் கீர்த்தன்யா, குதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், முதல்வர்கள் மாணிக் சர்க்கார், ஹிமந்த பிஸ்வா சர்மா, ரேகா குப்தா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் என்பதால், பதவியேற்பு விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் மோடி, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT