இந்தியா

“நான் ஊழல்வாதி அல்ல என்பது நிரூபணம் ஆனது!” - தீர்ப்புக்குப் பின் கேஜ்ரிவால் கண்ணீர் பேட்டி

‘ஆம் ஆத்மியை ஒழிக்க அமித் ஷாவும் மோடியும் தீட்டிய மிகப் பெரிய சதி’

மோகன் கணபதி

புதுடெல்லி: “நான் ஊழல்வாதி அல்ல. கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று பத்திரிகையாளர்கள் முன்பு கதறியழுதபடி அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று விடுவித்தது.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ‘‘நான் ஊழல்வாதி அல்ல. கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. உண்மை வெற்றி பெறும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

          

அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கேஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். இன்று, கேஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது’’ என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கேஜ்ரிவால் பேச முடியாமல் நா தழுதழுக்க அழுதார். அருகில் இருந்த மணீஷ் சிசோடியா அவரை ஆறுதல் படுத்தினார்.

வழக்கின் பின்னணி:

டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 21 பேரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT