இந்தியா

“நான் ஒரு தெருப் போராளி” - காங்கிரஸுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

மோகன் கணபதி

புதுடெல்லி: தான் ஒரு தெருப் போராளி என்றும், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல என்றும் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், அதன் பிறகு முதல் முறையாக இன்று ஒரு எம்பியாக நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

தர்மேந்திர பிரதான் வருகைக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பாஜக எம்பிக்கள், அவரை வரவேற்க நுழைவு வாயிலில் காத்திருந்தனர். அவர் வளாகத்துக்குள் நுழைந்தபோது, அவரை வரவேற்று சிறப்பு தொப்பி ஒன்றை அணிவித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர். அப்போது தர்மேந்திர பிரதான் புன்னகைத்த முகத்துடன் காணப்பட்டார்.

அப்போது பாஜக எம்பி ஒருவர், தனிப்பட்ட முறையில் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகியது அநேகமாக இதுவே முதல் என்று குறிப்பிட்டார்.

இந்த வரவேற்பு நிகழ்வின்போது காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ், தர்மேந்திர பிரதானை அணுகி இப்படி நடப்பது இயல்புதான் என கூறினார். அதற்கு தர்மேந்திர பிரதான், “ஒன்றும் நடந்துவிடவில்லை. நான் ஒரு தெருப் போராளி. குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து செயல்படும் செயல்பாட்டாளர் அல்ல” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தர்மேந்திர பிரதானை வரவேற்ற பாஜக எம்பிக்கள்

அமைச்சரவையில் இருந்து விலகிய போதிலும், அரசியல் ரீதியாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் தர்மேந்திர பிரதான் இருப்பதை உணர்த்துவதாக இந்த உரையாடல் பார்க்கப்பட்டது. பாஜகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக செயல்பட்ட தர்மேந்திர பிரதான், அம்மாநிலத்தில் என்டிஏ ஆட்சி தொடர்வதை உறுதிப்படுத்தினார். மேலும், மேற்கு வங்க பிரச்சாரத்திலும் முக்கிய பங்கு வகித்து, கடந்த மே மாதம் அம்மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைய அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT