இந்தியா

நிழல் யுத்தக் களத்தின் வித்தகர்கள் - ‘ரா’ உளவு அமைப்பின் வெற்றிக் கதை!

போத்தி ராஜ்.க

‘அறத்தைக் காப்பவனை அறம் காக்கும்’ - இதுதான் இந்தியாவின் தலைசிறந்த வெளிநாட்டு உளவு அமைப்பான ‘ரா’வின் (RAW) தாரக மந்திரம்.

வெற்றிகள் பெற்றால் கொண்டாட்டங்கள் இருக்காது, தோல்விகள் அடைந்தால் துக்கத்தையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது. அவர்களின் பெயரோ, முகமோ, முகவரியோ உலகுக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை.

தேசத்தின் இறையாண்மையைக் காக்க எல்லை கடந்து நிற்கும் அதிகாரிகளின் உழைப்பில்தான் இந்தியாவின் அமைதி நிலைநாட்டப்படுகிறது. துப்பாக்கிகளின் சத்தமின்றி, வெடிமருந்துகளின் புகையின்றி, எல்லைகளுக்கு அப்பால் நடக்கும் ஒரு ‘நிழல் உலகப் போரில்’ தேசத்தின் முதல் அரணாக நின்று போராடுபவர்கள்தான் ‘ரா’ அமைப்பின் உளவாளிகள்.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அதன் ராணுவப் பலத்தில் மட்டும் இல்லை; எதிரியின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணிக்கும் உளவுத் திறனில்தான் இருக்கிறது. இதற்காகத்தான் 1968-ம் ஆண்டு 25 அதிகாரிகளுடன் ‘ரா’ ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று 58 ஆண்டுகளைக் கடந்து, உலகின் மிகச் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

‘ரா’ எப்போது, ஏன் உருவானது?

1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையடைந்தபோது, நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை ‘இன்டலிஜென்ஸ் பியூரோ’ (IB) என்ற ஒரே அமைப்பே கவனித்து வந்தது. ஆனால், 1962-இல் சீனப் போர் மற்றும் 1965-இல் பாகிஸ்தான் போர் ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் மிகப் பெரிய கருந்துளை இருந்ததை வெளிச்சம்போட்டுக் காட்டின.

வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிக்கப் பிரத்யேகமாக ஒரு சக்திவாய்ந்த அமைப்பு தேவை என்பதை உணர்ந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 1968 செப்டம்பர் 21 அன்று ‘ரா’ அமைப்பை உருவாக்கினார். இதன் முதல் தலைவராக ராமேஸ்வர் நாத் காவோ பொறுப்பேற்றார்.

‘ரா’ அமைப்பை உருவாக்கும் பணி காவோவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பே, உளவுத் துறையில் அவர் கணிசமான அனுபவத்தைப் பெற்றிருந்தார். 1968-இல் அவருக்கு இருந்த சவால், வெளிநாட்டு உளவுத் துறைக்கான திறனை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்தே கட்டமைப்பதாகும். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் ‘ரா’வின் தலைவராகப் பணியாற்றிய காவோ, அதன் ஆரம்பகால செயல்பாடுகளையும் நிறுவனக் கலாச்சாரத்தையும் உருவாக்கினார். இவரது காலத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் ‘காவ் பாய்ஸ்’ (Kaoboys) என்று அழைக்கப்பட்டனர்.

‘ரா’வின் முக்கியப் பணிகள்

ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஜேம்ஸ் பாண்ட் சாகசங்களைவிட, நிஜ வாழ்க்கையில் ‘ரா’வின் பணிகள் மிகவும் சிக்கலானவை மற்றும் நுண்ணறிவுமிக்கவை. அவை:

> இந்தியாவின் எதிரி நாடுகளின் ராணுவ நகர்வுகள், அரசியல் மாற்றங்கள் மற்றும் உத்திசார் முடிவுகளை முன்கூட்டியே கணித்து மத்திய அரசுக்குத் தெரிவித்தல்.

> இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் தீட்டப்படும் பயங்கரவாதச் சதித்திட்டங்களைக் கண்டறிந்து அழித்தல்.

> அண்டை நாடுகளின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்பப் பாதுகாப்பை உறுதி செய்தல்.

> அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் அண்டை நாடுகளின் செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் இணையவழிக் கசிவுகளைக் கண்காணித்தல்.

> அண்டை நாடுகளின் அரசியல் நகர்வுகள், அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து தகவல் அளித்தல்.

> தேசியப் பாதுகாப்புக்குத் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகளைக் கண்காணித்தல்.

வங்கதேசப் போரும், ‘ரா’வின் வெற்றியும்

1968-இல் ‘ரா’ தொடங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில், அதன் திறமைக்கு ஒரு மாபெரும் சோதனை வந்தது. 1971-இல் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் போராடினர்.

ஆர். என். காவோ தலைமையிலான ‘ரா’, கிழக்குப் பாகிஸ்தானில் தொடர்புகளை ஏற்படுத்தி, உளவுத் தகவல்களைச் சேகரித்தது. வங்கதேச விடுதலைப் போராளிகளான ‘முக்தி பாகினி’க்கு பயிற்சி அளிப்பதிலும் ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது.

1971 நவம்பரில், பாகிஸ்தானிய அமைப்பில் உள்ள ஓர் உள்நபரிடமிருந்து வான்வழித் தாக்குதல் குறித்த உளவுத் தகவலை காவோவின் குழு பெற்று டிசம்பர் 3 அன்று பாகிஸ்தான் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே இந்திய ராணுவம் ஆயத்தமாக வழிவகுத்தது.

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளித் தடையும் விதிக்கப்பட்டது. இதன் விளைவாக 13 நாட்களில் பாகிஸ்தான் சரணடைந்தது. உலக வரைபடத்தில் ‘வங்கதேசம்’ உருவானது.

முக்கிய ‘சம்பவங்கள்’

1980-களில் பஞ்சாபில் தனிநாடு கோரிய காலிஸ்தான் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது கனடா, பிரிட்டன், பாகிஸ்தானில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த நிதி மற்றும் ஆயுதச் சங்கிலியை ‘ரா’ துண்டித்தது. 1984 ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ நடவடிக்கையின்போதும் வெளிநாட்டு ஆதரவுகளைக் கண்காணித்து அரசுக்கு முக்கியத் தகவல்களை வழங்கியது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எப்போதும் சவாலாக இருக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன்  ‘ரா’ நடத்தும் நிழல் உலகப் போர் குறிப்பிடத்தக்கது. 1970-களில் பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுதத்தைத் தயாரிக்க முயன்றபோது, கஹூட்டா (Kahuta) அணு உலை ஆய்வகத் தகவல்களை ‘ரா’ சேகரித்தது.

1999 கார்கில் போரின்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்துக் கைப்பற்றி, போரில் பாகிஸ்தான் அரசு நேரடியாக ஈடுபட்டதை உலகுக்கு நிரூபித்தது.

தொடக்க காலத்தில் மனித உளவு முறைகளை மட்டுமே நம்பியிருந்த ‘ரா’, இன்று செயற்கைக்கோள் படம்பிடித்தல், சைபர் கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இதன் கீழ் இயங்கும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO), நாட்டின் விண்வெளி மற்றும் இணையப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. எந்தப் புகழையும் விரும்பாமல், எல்லைக்கு அப்பால் கடந்து நின்று தேசத்தைக் காக்கும் ‘ரா’ அமைப்பின் பணி, வரலாற்றில் என்றும் போற்றத்தக்கது.

SCROLL FOR NEXT