இந்தியா

நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தானின் சிகார் பகு​தியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளா​வில் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்​தாளை அனுப்பி உள்​ளார். இந்த வினாத்​தாளை படித்​தால் நீட் தேர்​வில் அதிக மதிப்​பெண் பெறலாம் என்​றும் கூறி​யுள்​ளார்.

கடந்த 2-ம் தேதி சிகாரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாள​ருக்கு மாதிரி வினாத்​தாள் கிடைத்​திருக்​கிறது. அந்த வினாத்​தாளை அவர் தனது மாணவ, மாண​வியருக்கு வழங்கி உள்ளார். இதே வினாத்​தாளை சிலர் சமூக வலை​தளங்​களில் ரூ.2 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் வரை விற்​பனை செய்​துள்​ளனர். கடந்த 3-ம் தேதி நாடு முழு​வதும் நீட் நுழைவுத் தேர்வு நடை​பெற்​றது. இதில் கேட்​கப்​பட்ட கேள்வி​களும், சிகாரில் பரவிய மாதிரி வினாத்தாள் கேள்வி​களும் ஒன்​று​போல இருப்​பதை சிகாரில் உள்ள மற்​றொரு தேர்வு பயிற்சி மைய உரிமை​யாளர் கண்டுபிடித்தார்.

அதாவது நீட் நுழைவுத் தேர்​வில் 180 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. இதில் சுமார் 150 கேள்வி​கள் மாதிரி வினாத்​தாளில் அப்​படியே இடம்​பெற்​றிருந்​தன. இதுகுறித்து சிகார் நீட் தேர்வு பயிற்சி மைய உரிமை​யாளர், உத்​யோக் நகர் போலீஸ் நிலை​யம் மற்​றும் என்​டிஏ அமைப்​பிடம் புகார் அளித்​தார். கடந்த 7-ம் தேதி வினாத்​தாள் கசிவை என்​டிஏ ஒப்​புக் கொண்​டது. ராஜஸ்​தான், உத்​த​ராகண்​டில் வினாத்​தாள் கசிந்​திருக்​கிறது என்​றும் இதுகுறித்து மத்​திய புலனாய்வு அமைப்​பு​கள் விசா​ரிக்க பரிந்​துரை செய்திருப்பதாகவும் என்​டிஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

கடந்த 8-ம் தேதி மத்​திய புல​னாய்வு அமைப்​பு​கள் மற்​றும் ராஜஸ்தான் போலீ​ஸார் இணைந்து விசா​ரணை நடத்​தினர். இதுதொடர்பாக சிகார், ஜுன்​ஜுனு மற்​றும் உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனை சேர்ந்த பலர் கைது செய்​யப்​பட்டு உள்ளனர். மேலும் பலரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வருகிறது. ராஜஸ்தானின் சிகாரில் பரவிய அதே மாதிரி வினாத்தாள் மற்றொரு சமூக​விரோத கும்​பலுக்​கும் கிடைத்திருக்கிறது.

அந்த கும்​பல் மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் அண்​மை​யில் கூடி சதித் திட்​டம் தீட்​டி​யிருக்​கிறது. இந்த கும்​பல் மூலம் மகாராஷ்டி​ரா, ஹரி​யா​னா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, காஷ்மீர், ராஜஸ்​தான், பிஹார், டெல்லி உள்​ளிட்ட மாநிலங்​களில் நீட் மாதிரி வினாத்​தாள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளது.

2 முக்​கிய குற்​ற​வாளி​கள் கைது

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் போலீஸ் வட்டாரங்​கள் கூறிய​தாவது: ராஜஸ்​தானின் கோட்டா நகரம் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்​களின் தலைநக​ராக கருதப்​படு​கிறது.

இங்கு ஏராள​மான பயிற்சி மையங்​கள் செயல்​படு​கின்​றன. தற்போது கோட்டா நகருக்கு இணை​யாக ராஜஸ்​தானின் சிகார் நகரும் வளர்ந்து வரு​கிறது. இந்த நகரில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட முன்​னணி நீட், ஜேஇஇ பயிற்சி மையங்​கள் செயல்​பட்டு வருகின்றன. வினாத்​தாள் கசிவு தொடர்​பாக சிகார் நகரில் ஆர்.கே.கன்​சல்​டன்சி என்ற நிறு​வனத்தை நடத்தி வந்த ராகேஷ், ஜெய்ப்​பூரை சேர்ந்த மணீஷ் யாதவ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர்.

இரு​வரும் வினாத்​தாள் கசிவு மோசடி​யின் மூளை​யாக செயல்பட்டிருப்​ப​தாக சந்​தேகிக்​கிறோம். இவர்​களில் ராகேஷுக்கும் கேரளா​வில் எம்​பிபிஎஸ் படிக்​கும் சிகார் மாணவருக்​கும் மிக நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. ராகேஷும் மணீஷ் யாத​வும் கையால் எழுதப்​பட்ட நீட் மாதிரி வினாத்​தாளை பல லட்​சம் ரூபாய்க்கு விற்​பனை செய்​துள்​ளனர். அவர்​கள் எத்தனை பேருக்கு வினாத்​தாளை விற்​பனை செய்​தனர் என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது.

அவர்​கள் மூலம் வினாத்​தாள் கிடைக்​கப் பெற்​றவர்​கள் அவர​வர் விருப்​பம்​போல சமூக வலை​தளங்​களில் வினாத்​தாளை விற்பனை செய்​துள்​ளனர். தற்​போது சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டு இருப்​ப​தால் அனைத்து ஆதா​ரங்​களை​யும் சிபிஐ அதி​காரி​களிடம் வழங்​கு​வோம். சிபிஐ வி​சா​ரணை​யில் மேலும்​ பல்​வேறு உண்​மை​கள்​ வெளிச்​சத்​துக்​கு வரும்​. இவ்​வாறு ராஜஸ்தான்​ போலீஸ்​ வட்டாரங்கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT