பினராயி விஜயன்

 
இந்தியா

கோயில் தங்கம் மாயமான விவகாரம் | சோனியா காந்தியை உன்னிகிருஷ்ணன் சந்தித்தது எப்படி? - பினராயி விஜயன் கேள்வி

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் பொட்டியால், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முடிந்தது எப்படி என்றும், அந்த சந்திப்பின்போது அவருடன் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் எம்பியுமான அடூர் பிரகாஷ் இருந்தது ஏன் என்றும் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தங்கம் மாயமானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்த வழக்கு தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை எஸ்ஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில், முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக அடூர் பிரகாஷ் கூறி இருந்தார். இந்நிலையில், உன்னிகிருஷ்ணன் போற்றி, அடூர் பிரகாஷ் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "இந்த விவகாரத்தில் அடூர் பிரகாஷின் பெயர், அந்த புகைப்படம் வெளியான பிறகுதான் எழுப்பப்படுகிறது. அந்த புகைப்படத்தில் சோனியா காந்தியுடன், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேலும் இருவரும் உள்ளனர். அவர்களில் ஒருவர் உன்னிகிருஷ்ணன் போற்றி. மற்றொருவர் யார்? உன்னிகிருஷ்ணன் போற்றி அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. போற்றி தனியாக செல்லவில்லை. அவர்களில் ஒருவர், தங்கத்தை வாங்கியவர் என்று தற்போது விசாரணைக் குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு வியாபாரி.

நாட்டின் மிகவும் உயர் பாதுகாப்பு கொண்ட அரசியல் தலைவரான சோனியா காந்தியை, இந்த இரண்டு நபர்களும் ஒரே நேரத்தில் எப்படி சந்திக்க முடிந்தது? முதல்வர் அலுவலகத்தின் மீது குற்றம் சாட்டிய அந்த நபர்(அடூர் பிரகாஷ்), இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறுகிறார். உன்னிகிருஷ்ணன் போற்றி அழைத்ததால் அங்கு சென்றதாகக் கூறுகிறார். போற்றி அழைத்தாலே செல்லக்கூடியவரா அவர்? இவர்கள் எல்லோரும் எப்படி ஒன்றாக சேர்ந்தனர்?" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT