புதுடெல்லி: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாட புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடத்தில், ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான பாடத்தில், நீதிமன்றங்களின் படிநிலை, நீதிக்கான நடைமுறைகளைத் தாண்டி, நீதித்துறையில் ஊழல் மற்றும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
மேலும், ”நீதித்துறையில் ஊழல் நடைபெறும் சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் தெரிவித்த கருத்தும் அதில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் குறித்து புகார் எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ‘‘பாடப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றது குறித்த தகவல் வெளியானதும் அதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, உடனடியாக செயல்பட்டுள்ளது.
அந்தப் புத்தகத்தில் அந்த அத்தியாயம் இடம்பெறக் காரணமாக இருந்த இரண்டு அதிகாரிகளும் கல்வி அமைச்சகத்தின் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள். வேறு அமைச்சகத்திலும்கூட அவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். நீதிமன்றத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டிருக்கவில்லை’’ என தெரிவித்தார்.
‘‘உச்ச நீதிமன்றத்தின் எதிர்ப்பை அடுத்து, அச்சடிக்கப்பட்ட 2.25 லட்சம் பிரதிகளில் விற்கப்பட்ட 38 பிரதிகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இது தற்செயலாக நிகழ்ந்த தவறு. அதற்காக மன்னிப்பு கோருகிறோம். அந்த பாடப்பகுதி திருத்தி எழுதப்படும்’’ என்று என்சிஇஆர்டி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த விவகாரத்தால் கடும் கோபமடைந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் ஆழமான விசாரணையை நடத்த விரும்புகிறோம். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில், இதற்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பது எனது கடமை. தலைகள் உருள வேண்டும்(காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்). சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை இந்த வழக்கை நான் முடிக்க மாட்டேன். இதற்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.
நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ அல்லது குறைமதிப்புக்கு உட்படுத்தவோ உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நீதித்தறை ஊழல் நிறைந்தது என்று நீங்கள் முழு ஆசிரியர் சமூகத்துக்கும் மாணவர் சமூகத்துக்கும் கற்பித்தால் அது எத்தகைய செய்தியை வழங்கும். ஆசிரியர்கள் அதைக் கற்றுக்கொள்வார்கள். மாணவர்களும் அதை கற்றுக்கொள்வார்கள்.
வெளியிடப்பட்ட அந்த புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதாக அரசாங்கம் தரப்பில் கூறினாலும், அது தொடர்ந்து பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த புத்தகங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சமூக ஊடகங்களிலும் உள்ளது. இதனால், இன்று நீதித்துறை ரத்தம் சிந்துகிறது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து, ‘‘நீதித்துறை தொடர்பாக புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அத்தியாயம் பொறுப்பற்றது. நீதித்துறையை அவமதிக்கக்கூடியது. இதை உணராமல் என்சிஇஆர்டி கவுன்சில் இயக்குநர் அதை ஆதரித்தார். நீதித்துறையின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கும், குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது. இதை சரி செய்யாவிட்டால், நீதித்துறை மீதான பொதுமக்களின் குறிப்பாக மாணவர்களின் நம்பிக்கை சிதையக்கூடும்.
என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த புத்தகத்தை அச்சிடவும் விற்பனை செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. புத்தகத்தின் அனைத்து நகல்களையும் அரசு உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.