புதுடெல்லி: ராஜஸ்தானின் புஷ்கர் மேளாவில் ஒட்டகங்களை விட குதிரைகள் அதிக கவனம் ஈர்த்துள்ளன. நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் ஜொலிக்கும் குதிரைகள் ரூ.23 கோடி வரை விற்பனைக்கு உள்ளன.
ராஜஸ்தானின் புஷ்கர் மேளா, ஒட்டக சந்தைக்கு பெயர் போனது. இந்த சந்தை, அஜ்மீர் மாவட்டத்தின் புஷ்கர் நகரில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் மட்டுமே இந்த மேளா நடைபெறும். இந்தமுறை புஷ்கர் மேளாவில் ஒட்டகங்களை விட குதிரைகளே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
இந்த குதிரைகள், மேளதாள முழங்கங்களுடன், பவுன்சர்கள் படை சூழ, திரைநட்சத்திரங்களைப் போல பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை விலை பேச வருபவர்களை விட, பார்வையாளர்கள் கூட்டமே அதிகமாக உள்ளது.
இத்தகைய நட்சத்திரக் குதிரைகளுடன் செல்பி எடுக்க பெரும் கூட்டமே முண்டியடிக்கிறது. இவற்றின் உரிமையாளர்களும் தங்கள் குதிரைகளை நடனமாடச் செய்து; வித்தை காட்டி ஈர்க்கின்றனர்.
ஒட்டகங்களின் சந்தையான இந்த புஷ்கர் மேளா தற்போது, திரைநட்சத்திரங்களுக்கு இணையான குதிரைகளின் புதிய அடையாளமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் ஒட்டக வணிகத்திற்குப் பெயர் பெற்ற புஷ்கர், இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள குதிரைகள் குறித்த செய்திகளால் கவனம் பெற்றுள்ளது.
புஷ்கர் மேளா
இந்தமுறை புஷ்கர் மேளாவில், 'ஜேத்வால் ஸ்டட்' பண்ணையைச் சேர்ந்த 'பாதல்' எனும் குதிரையே அனைவராலும் அதிகம் பேசப்படுகிறது. மேளதாளங்களுடன் பவுன்சர்கள் புடைசூழ பாதல் குதிரையின் வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த பாதல் குதிரையின் விலை ரூ.23 கோடி என பார்வையாளர்களால் மதிப்பிடப்படுகிறது.
ஆனால், பாதல் குதிரையின் உரிமையாளர் ராகுல் ஜேத்வால், தான் இதற்கென எந்த விலையையும் நிர்ணயிக்கவில்லை என்று கூறுகிறார். மக்கள் தாங்களாகவே விலையைக் கணக்கிடுகிறார்கள் என்றும், இதை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மேளாவில் பாதல் குதிரை முகாம் முன்பாக நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அது தொடர்பான ஒவ்வொரு காணொளிக் காட்சிப்பதிவுகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
பாதல் குதிரையின் உண்மையான மதிப்பு அதன் வம்சாவளியிலேயே அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதல் குதிரை சந்ததியின் ஆரம்ப விலை ஐந்து லட்சம் ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது. இவற்றை வாங்குபவர்களின் ஆர்வம் மற்றும் பொருளாதார வசதிக்கேற்ப விலை மாறுபடுகிறது.
இருப்பினும், அனைத்து வணிகர்களும் இந்த மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. பஞ்சாபின் ஒரு குதிரை வணிகர் பாதல் குதிரையின் விலை ரூ.20 முதல் 23 கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் எனக் குறிப்பிடுகிறார். சந்தையில் இத்தகைய குதிரைகளுக்கு அதிகபட்சம் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
'நுக்ரா' எனும் இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிறக் குதிரைகளும் புஷ்கரில் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. பால் போன்ற வெண்ணிறம், இளஞ்சிவப்பு நிற மூக்கு மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த குதிரைகள், திருமணங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு மிகவும் விரும்பப்படுகின்றன. இந்த வகையைச் சேர்ந்த 'தவனூர்' என்ற குதிரை அதன் அரச தோற்றத்தால் அனைவரையும் ஈர்க்கிறது.
இது பிஸ்லெரி பாட்டில் தண்ணீரையே குடிப்பதாகவும், அதன் தீவனத்தில் முந்திரி மற்றும் பாதாம் கலந்து கொடுக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அஜ்மீர் மாவட்டத்தின் கேக்ரியைச் சேர்ந்த 'கிருஷ்ணா' என்ற பெண் குதிரை, இந்தச் சந்தையிலேயே மிக உயரமானாதாகக் கருதப்படுகிறது. இதன் மதிப்பு பல கோடி ரூபாயாக இருக்கலாம் என்று அதன் உரிமையாளர் கூறுகிறார். எனினும், இந்த கிருஷ்ணா, விற்பனைக்காக அல்ல, கண்காட்சிக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த 'கோல்டன் கிங்' எனும் மார்வாரி இனக் குதிரை ரூ.21 கோடி என மதிப்பிடப்படுகிறது. கோல்டன் கிங்கைப் போல மகராஷ்டிராவைச் சேர்ந்த 'அலெக்ஸ்' மற்றும் 'ஆர்டிஎக்ஸ்' குதிரைகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் தலா ரூ.5 கோடி என அதற்கான விலையை நிர்ணயித்துள்ளனர். இவற்றில் 'கோல்டன் கிங்' காட்சிப்படுத்துவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் இதே போல் குதிரைகளுக்கு பல கோடி ரூபாய் விலை கூறப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் அரசின் கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தையில் 224 குதிரைகள் மொத்தம் சேர்த்து ரூ.75 லட்சத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்ச விற்பனை விலை வெறும் ரூ.46 லட்சம் மட்டுமே.
எனவே, குதிரைகள் உண்மையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றனவா, அல்லது இவை ஒரு வகை விளம்பர உத்தியா என்ற கேள்வி எழுகிறது.
குதிரைகளின் நடனம், இசையின் தாளத்திற்கு ஏற்ப அணிவகுத்துச் செல்லுதல் மற்றும் பல்வேறு சாகசங்கள் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்களாகும். குதிரைகளின் நடை, சுறுசுறுப்பு, சமநிலை மற்றும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி உள்ளிட்ட வெளிப்பாடுகள், புஷ்கர் மேளாவிற்கு புதிய முகம் அளிக்கிறது.
இந்தத் திருவிழா வெறும் வணிகச் சந்தையாக மட்டுமன்றி, குதிரைகளின் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாகவும் பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் காவல் துறையைச் சேர்ந்த குதிரைப்படையினரும், குதிரைகளுடன் இணைந்து விறுவிறுப்பான சாகசங்களைச் செய்து பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெறுகின்றனர்.