புவனேஸ்வர்: ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 187 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன.
இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்பல்பூரில் நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர்.
தேர்வர்கள் வெட்ட வெளியில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட இந்தப் பணிக்கு தினசரி படியாக ரூ.639 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் எம்பிஏ, எம்சிஏ என முதுநிலை பட்டம் பெற்றவர்களும் பங்கேற்றனர். இது வேலையின்மையின் தீவிரத்தை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.