புதுடெல்லி: அவசரகாலத் தயார் நிலைக்காகவும், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60,000 தன்னார்வளர்களுக்கு ‘சமூக பாதுகாப்பு பணியாளர்’ பயிற்சி அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 600 சமூக பாதுகாப்பு முதன்மை பயிற்சியாளர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்க உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நவீன அமைப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், துடிப்பான சமூகப் பாதுகாவலர்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீயணைப்பு சேவைகள், குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் தலைமை இயக்குநரகம், இந்திய ராணுவத்தின் உதவியுடன் சமூக பாதுகாப்புக்கான முதன்மை பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பயிற்சியை அளிக்கும் முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
முதற்கட்டமாக, பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்தும் தலா 50 பேர் வீதம், மொத்தம் 600 முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மூன்று நாள் பயிற்சி, வரும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்துக்குள் இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் அளிக்கப்படும்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்த காலங்களில் சமூக பாதுகாப்புப் பணியாளர்கள் திறம்படச் செயல்படுவதற்கு ஏற்ப இந்த பயிற்சி வழங்கப்படும். இதில், அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள், தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய மூன்று அம்சங்களை இந்தப் பயிற்சி உள்ளடக்கி இருக்கும்.
இந்தப் பயிற்சியில் நவீன மற்றும் கலப்புப் போர்முறை, ட்ரோன் குறித்த விழிப்புணர்வு மற்றும் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்கள் தடுப்பு ஆகியவை இடம்பெறும். தீ பாதுகாப்பு, கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான விழிப்புணர்வு உள்ளிடவை இதில் இடம்பெற உள்ளது. தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பாக, அவசர காலத் தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு நடைமுறைகள், டிஜிட்டல் மீள்திறன் பயிற்சிகள் இருக்கும்.
இந்தச் சிறப்புப் பயிற்சியைப் பெற்ற பிறகு, ஒவ்வொரு முதன்மைப் பயிற்சியாளரும் தங்கள் மாநிலங்களின் 100 சமூக பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பர்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, மேகாலயா, சிக்கிம், அசாம், உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்தத் திட்டத்திற்காக 10 இடங்களை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், அமிர்தசரஸ், பஸ்தர், பெங்களூரு, கவுகாத்தி, லடாக், லட்சத்தீவு, மும்பை, ருத்ரபிரயாக் மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை இதில் அடங்கும்.