புதுடெல்லி: இந்தியா முழுவதிலும் நேற்று ஹோலி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வண்ணம் பூசுதல், சேற்றை இறைத்தல், உடைகளை கிழித்து விளையாடுதல் என பல்வேறு வகையில் மக்கள் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். புராண வரலாற்றின் அடிப்படையில் ஹோலி பண்டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதற்காக, 10 நாட்கள் முன்பாக ஒவ்வொரு நகரம் அல்லது கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் காய்ந்த மரக்கிளைகளை கொண்டுவந்து குவிக்கின்றனர்.
இதற்கு நாள்தோறும் அப்பகுதி பெண்கள் பூஜை செய்கின்றனர். ஹோலிப் பண்டிகை நாள் அதிகாலையில் பூஜை செய்த பின் அந்த விறகுகளை எரிக்கின்றனர். தீ கொழுந்து விட்டு எரியும்போது மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பதுடன், அந்த தீயை தங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து புதிதாக அடுப்பை மூட்டுவார்கள். இந்த சடங்குடன் ஹோலி பண்டிகை நேற்று தொடங்கியது.
மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். உ.பி.யில் கிருஷ்ண ஜென்ம பூமியாக கருதப்படும் மதுராவில் ஹோலி பண்டிகை பிரசித்தி பெற்றது. அங்கு சுமார் 10 நாட்கள் முன்பாகவே ஹோலி தொடங்கி விடுகிறது.
பிருந்தாவனின் புகழ்பெற்ற ’பாங்கே பிஹாரி’ கிருஷ்ணன் கோயிலில் பலவண்ண செயற்கை மழையுடன் கொண்டாடப்படும் ஹோலி உலகப் புகழ் பெற்றது. உ.பி., பிஹார், ம.பி. உள்ளிட்ட வடமாநிலங்களில் சற்று வித்தியாசமாகவும் ஹோலி கொண்டாடப்பட்டது.
மதுராவின் பர்ஸானா பகுதியில் ஆண்களைப் பெண்கள் தடியால் அடித்துக் கொண்டாடும் ஹோலி மிகவும் ரசிப்பதாக இருந்தது. மதுராவில் நவுஹீல், சுரிர் ஆகிய இடங்களை சுற்றியுள்ள கிராமங்களில் வண்ணங்களின் ஹோலிக்கு மறுநாள் சேற்று மண் வீசி ஹோலியை கொண்டாடுகின்றனர். இந்த உற்சாகம் இன்று நண்பகல் வரை தொடரும். இந்த வகை ஹோலி, மதுராவில் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
இதேபோல், ஹோலிக்கு மறுதினம் ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் குர்தா, பைஜாமாவை கிழித்துக் கொண்டு விளையாடுகின்றனர். உ.பி., பிஹாரின் சில பகுதிகளில் மட்டுமே இவ்வாறு கொண்டாடப்படுகிறது.