லக்னோ: இஸ்லாத்திடம் இருந்து இந்துக்கள் ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் குன்வர் ரகுராஜ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்துக்களை ஒன்றிணைக்கக் கூடிய சித்தாந்தம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரும், ஜன்சத்தா தளம் (லோக்தாந்திரிக்) கட்சியின் தலைவருமான ராஜா பைய்யா என்று அழைக்கப்படும் குன்வர் ரகுராஜ் பிரதாப் சிங், “இது தொடர்பாக நாம் இஸ்லாத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சமாஜ்வாதி கட்சியிலும் பல முஸ்லிம்கள் உள்ளனர். பிற அரசியல் கட்சிகளிலும், ஏன் இடதுசாரி கட்சிகளில்கூட முஸ்லிம்கள் உள்ளனர். இருப்பினும் அவர்களைப் பொறுத்தவரை, இஸ்லாம்தான் முதன்மையானதாக உள்ளது.
எனவே, இந்துக்கள் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் எல்லைக்குள்ளும் தங்களைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. ‘இந்துத்துவா’ என்று வரும்போது அவர்கள் முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் வரும் போகும்.
இறைவன், தர்மம், சனாதன மரபு ஆகியவற்றின் மீதான நமது சித்தாந்தமும் நம்பிக்கையும உறுதியானதாகவும், தீவிரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
‘இந்துத்துவா’ என்ற பெயரில் கூட அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ளதாகவும், சிலர் மென்மையான இந்துத்துவா என்றும் மற்றவர்கள் தீவிர இந்துத்துவா என்றும் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜா பைய்யா, “இறைவனின் சிசிடிவி கேமரா, வெளிப்புறத்தை மட்டுமல்ல, அகத்தையும் படம் பிடிக்கிறது. எனவே, அவரிடம் இருந்து எதுவும் மறைந்திருக்க முடியாது.
நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர, இன்றைய அரசியல் கட்சிகள் எவையும் இந்துக்களிடையே ஒற்றுமையையோ அல்லது பிணைப்பையோ விரும்புவதில்லை என்பதே எனது கருத்து.” என தெரிவித்துள்ளார்.