உடுப்பி: “இந்துக்கள் முதலில் மதத்தைப் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரும் நம் மதத்தை தாக்கத் துணியாதபடி குரல் எழுப்ப வேண்டும்.” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நேற்று மாலை பவன் கல்யாண் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அக்கோயிலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “சனாதன தர்மம் ஒருபோதும் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல; அது மனிதகுலத்திற்கு ஒரு அறிவியல் ஞானப் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல். மற்றவர்கள் நம் தர்மத்தைத் தாக்குகிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, முதலில் அதைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், யாரும் நம்மைத் தாக்கத் துணியக்கூடாது என்பதற்காக நம் குரலை உயர்த்த வேண்டும்.
தமிழ்நாட்டில், இந்துக்கள் தங்கள் தர்மத்தைப் பின்பற்றுவதற்காக சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. மேலும், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில், வழிகாட்டுதல் கோட்பாடுகள் அடங்கிய பக்கம், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிப்பதை சித்தரிக்கிறது.
அந்த விளக்கம் வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. அரசியலமைப்பின் மதிப்புகள், சமூக நீதி, பொறுப்பு, சமத்துவம், நலன் மற்றும் தர்மத்தை நிலைநிறுத்துதல் ஆகியவை கீதையின் சாரத்தில் வேரூன்றியுள்ளன என்ற செய்தியை இது வெளிப்படுத்துகிறது. சனாதன தர்மம் நல்லொழுக்கத்துக்கான திசைகாட்டி; அரசியலமைப்பு நீதிக்கான திசைகாட்டி. இரண்டும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன.” என்றார்