பெங்களூரு: பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மத்திய அரசுக்குச் சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இயங்கும் பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்த நிறுவனத்தின் பெயர்ப் பலகை இந்தி மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பினர், அப் பலகையை அகற்றுமாறு கடந்த வாரம் பி.இ.எல். நிறுவன மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை பி.இ.எல். நிறுவனம் நிராகரித்ததை அடுத்து, நேற்று கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திற்குச் சென்று, இந்தி பெயர்ப் பலகையை உடைத்தனர். மேலும், இந்தி திணிப்புக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கமிட்டனர்.
இந்நிலையில், இந்தி பெயர்ப் பலகையை உடைத்த கன்னட அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், வித்யாரண்யபுரா போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கன்னட ரக் ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.