குவாஹாட்டி: அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குவாஹாட்டி மத்திய தொகுதியில் போட்டியிடும் அசாம் ஜாதீய பரிஷத் (ஏஜேபி) கட்சியின் வேட்பாளர் குன்கி சவுத்ரி, மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “அசாமில் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் கேட்டுக் கொண்டதால் முஸ்லிம் மக்கள் கூட, பசுவின் இறைச்சியை சாப்பிடுவதில்லை. அவர்கள் எருமை மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிடுகின்றனர். அசாமில் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. அதை மீறினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
பசுவின் இறைச்சி சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். அவர்கள் மீது சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வோம்" என்றார். இந்நிலையில் `ஏஜேபி கட்சியே.. திரும்பிச் செல்’ என்ற கோஷத்தை குன்கி சவுத்ரி எதிர்ப்பாளர்கள் தொகுதி முழுவதும் எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து குன்கி சவுத்ரி கூறும்போது, “இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவதற்காக, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஏன் இவ்வளவு பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு வருகிறது? அவர்கள் வெளியிட்டுள்ள அனைத்து வீடியோக்களும் பொய். அவர்கள் ஒரு வீடியோவை விரும்பினால், என் வீட்டுக்கே வரலாம்; நானே எனது வாக்குமூலத்தை வீடியோவாக அளிக்கிறேன். பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள்" என்றார்.