புதுடெல்லி: இந்திய தொழில்முறை செவிலியர் சங்கம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையச் சட்டம்’ மத்திய அரசால் 2024 பிப்ரவரி 29 அன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதன்படி, இந்தியாவில் செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்வி, பயிற்சி நடைமுறைகளை ஒழுங்குபடுத்த ‘இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு’ பதிலாக ‘தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா பிறப்பித்த உத்தரவில், “இந்த மனுவையே மனுதாரரின் கோரிக்கை மனுவாகக் கருதி, 2 மாதங்களுக்குள் தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பணி ஆணையம் அமைப்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகுந்த முடிவை எடுக்க வேண்டும். ஒருவேளை மனுதாரர் கோரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில், டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் மீண்டும் அணுகலாம்” என கூறப்பட்டுள்ளது.