மத்திய டெல்லி பகுதி
புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட முன்னெடுப்பை அடுத்து, ஜந்தர் மந்தர் அமைந்துள்ள மத்திய டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (சனிக்கிழமை) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, போராட்டம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் 15 ஆயிரம் போலீஸாரும், 23 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட முயல்பவர்களை அவர்கள் கைது செய்து வருகின்றனர்.
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சிஜேபியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி விமான நிலையத்திலும், சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி ஜந்தர் மந்தர் அருகிலும் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர், நகரின் பல பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஜந்தர் மந்தர் நோக்கி சிஜேபி மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், நேஹா போரா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டங்கள், கைது போன்ற நடவடிக்கைகள், போலீசாரின் சோதனைகள், பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் போன்றவை காரணமாக மத்திய டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போக்குவரத்து துணை ஆணையர் விகாஷ் குமார், “நேற்று மாலை நாங்கள் போக்குவரத்து வழிகாட்டல் ஒன்றை வெளியிட்டோம். அது டெல்லி நகரம் முழுமைக்குமான வழிகாட்டலாக இருந்தது. அதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, குறிப்பாக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள், அவற்றின் உட்புறச் சாலைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்காததால் உட்புறப் பகுதிகளுக்குள் நுழையும் வாகனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதேநேரத்தில்,வெளி மற்றும் இடைப்பகுதிகளில் போக்குவரத்து தடையின்றி நடைபெறுகிறது. எஸ்பிஎம், தவுலா குவான், மதுரா சாலை உள்ளிட்ட முக்கியப் பாதைகளில் போக்குவரத்துப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.
ஜந்தர் மந்தர் போன்ற சில பகுதிகளில் பிஎன்எஸ்எஸ்-ன் பிரிவு 163 அமலில் உள்ளது. எனவே, இங்கு மக்கள் ஒன்றகூடக் கூடாது. சட்டத்தை மதித்து நடக்குமாறு நாங்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். யாரும் ஒன்றுகூடவோ, போராட்டம் நடத்தவோ வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.