கோப்புப் படம்

 
இந்தியா

தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஏப்.30 முதல் 3 நாட்களுக்கு கனமழை!

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் ஏப்.30 முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட கர்நாடகத்தின் உள்பகுதி முதல் குமரிக்கடல் வரை, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில் நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஏப்.27) முதல் 29-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 30, மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மே 1-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் ஏப்.30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT