புவனேஸ்வர்: ஒடிசாவில் தொடரும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிவசாகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக ஒடிசா மாநிலத்திலுள்ள ஹிராகுட் அணை நிரம்பி வழிகிறது. அணை நிரம்பியுள்ளதால் அணையைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா மாநில வருவாய், பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஹிராகுட் அணை நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 520 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன” என்றார்.