கோப்புப்படம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
கடந்த 20-ம் தேதி ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவரோடு 2 துணை முதல்வர்கள் உட்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அப்போது துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரிக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்வர் நிதிஷ் குமார் சுமார் 20 ஆண்டுகள் உள் துறையை தனது வசம் வைத்திருந்தார். முதல்முறையாக பாஜகவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது பிஹார் அரசியலில் முக்கிய திருப்பு முனையாகக் கருதப்படுகிறது.
இந்த சூழலில் பிஹார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் பிரேம் குமார் முன்னிறுத்தப்படுகிறார். இதேபோல ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் தாமோதர் ராவத் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.