திருவனந்தபுரம்: கேரள தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. ஆனால், மாநிலம் முழுவதும் தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வயநாடு, இடுக்கி மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 12 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது. கொல்லம், கோட்டயம், பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பத்தனம்திட்டா, ஆலப்புழை, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்து, 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. வடகோடியில் உள்ள காசர்கோடு, தென்கோடியில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டங்களில் கூட வெப்பநிலை 36 டிகிரியை எட்டியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அனல் பறப்பதால், பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் பகல் நேர பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, காலை மற்றும் மாலையில் வாக்காளர்களை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் இன்று (மார்ச் 29) லேசான மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மழை பெய்தால், பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்த முடியும் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன.
கேரளாவின் 140 தொகுதிகளில் மொத்தம் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போது 67 வேட்பாளர்கள் குறைவாகும். கோடுவல்லி தொகுதியில் அதிகபட்சமாக 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து பேராவூர், மஞ்சுவேஸ்வரம், திருவனந்தபுரம் ஆகிய தொகுதிகளில் தலா 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.