புதுடெல்லி: தேசிய திறந்தநிலை தரவரிசைப் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அனுமதி மறுத்த நிலையில், தான் மல்யுத்தத்தை விட்டு விலக வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் விரும்புவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வினேஷ் போகத், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகருக்கு வருகை தந்தார். விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத், “அவர்கள் அரசியல் ரீதியாக சரியானவர்களாகக் காட்டிக்கொள்ள முயன்றனர். விஷயத்தை நேரடியாகக் கூறுமாறு நான் அவர்களிடம் சொன்னேன்.
நான் போட்டியில் பங்கேற்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சிக்கல்களால் நான் சோர்வடைந்து இறுதியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் என்னை இத்தனை சர்ச்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.
சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் மற்றம் அவர்களின் குழுவினர்தான் இதற்குக் காரணம். அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போகிறேனா என கேட்கிறீர்கள். எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய நாங்கள் முயல்வோம். பொருத்திருந்து பாருங்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மே 10 முதல் 12-ம் தேதி வரை கோண்டாவில் நடைபெற உள்ள 2026 சீனியர் ஓபன் தரவரிசைப் போட்டியில் பங்கேற்க நான் தகுதி பெற்றுள்ளேன். இப்போட்டிக்கான பதிவை நான் நிறைவு செய்துள்ளேன். இதன்மூலம், மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு திரும்புவதை உறுதி செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வரவிருக்கும் சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.