இந்தியா

“சவால்களுக்கு தீர்வு காண துணியுங்கள்” - இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

மோகன் கணபதி

புதுடெல்லி: புதிய சவால்களுக்குப் புதிய தீர்வுகளைக் காணும் துணிச்சலைக் கொண்டிருப்பவரே வெற்றி பெறுவார்கள், எனத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்கள் அத்தகைய துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மாறி வரும் இந்த உலகமும் தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். யார் தொடர்ந்து கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

புதிய சூழல்களையும் சவால்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் அந்த சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவார்கள். டெல்லி ஐஐடியில் நீங்கள் இதைத்தான் கற்றுக்கொண்டீர்கள்.

இன்று உலகின் மிக முக்கிய சன்பாடுகள் மிக வேகமாக மாறுகின்றன. உலகளாவிய அதிகாரச் சமநிலையும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சக்தி தொழில்நுட்பத்தின் வேகம்தான்.

அடுத்த 20-30 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்று இன்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. மாற்றம் நிகழும்போதெல்லாம் சவால்களும் எழுகின்றன. அதே நேரத்தில், புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன.

உலகம் மாறும், தொழில்நுட்பம் மாறும், தொழில்துறைகள் மாறும், தொழில் முறைகளும் மாறும். ஆனால், இவை அனைத்துக்கும் மத்தியில் கற்றுக்கொள்பவரே வெற்றி பெறுவார். புதிய சவால்களுக்குப் புதிய தீர்வுகளைக் காணும் துணிச்சல் கொண்டவரே வெற்றி பெறுவார். அவருக்கு சவால்கள் வாய்ப்புகளாக மாறும்.

வாழ்க்கையில் ஆர்வத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளும் உந்துதலை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.

இன்று இந்தியா பொருளாதார தன்னிறைவு, தொழில்நுட்ப தன்னிறைவு, தொழில்சார் தன்னிறைவு என ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவு பெற்ற நாடாக மாற செயல்பட்டு வருகிறது. இதுவே வளர்ந்த இந்தியாவின் அடித்தளமாகும்.

இளைஞர்கள் எவ்வளவு வலிமையானவர்களோ அந்த அளவுக்கு நாடும் வலிமையானதாக இருக்கும். முன்பு அனுமதி மறுக்கப்பட்ட பல துறைகளை நாங்கள் திறந்துவிட்டுள்ளோம். ஆட்சி நிர்வாகத்தில் முற்போக்கான சிந்தனையுடன் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

செமிகண்டக்டர் துறை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவின் ஸ்டார்ட்-அப் புரட்சியானது, உங்களைப் போன்ற இந்த தலைமுறை இளைஞர்களால் வடிவமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீர்வு காண்பதற்கான துணிச்சலைக் கொண்டிருங்கள்.

டெல்லி ஐஐடியில் இருந்து எண்ணற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் உருவாகி உள்ளனர். ஒரு கல்வி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT