இந்தியா

“வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக... நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” - ராகுல் காந்தி

திரிபுரா சம்பவத்துக்கு கடும் கண்டனம்

மோகன் கணபதி

புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த அஞ்செல் சக்மா என்ற மாணவர், டேராடூனில் கொலை செய்யப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பை பாஜக இயல்பாக்குகிறது என்றும், நாம் செயலிழந்த சமூகமாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘அஞ்செல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவுக்கு எதிராக டேராடூனில் நடந்த சம்பவம் ஒரு கொடூர வெறுப்புக் குற்றம். வெறுப்பு ஒரே இரவில் தோன்றுவதில்லை. பல ஆண்டுகளாக நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் தவறான சித்தரிப்புகள் மூலம் அது நமது இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது. அதோடு, பாஜகவின் வெறுப்பை உமிழும் தலைமை, இதை இயல்பாக்கி வருகிறது.

இந்தியா என்பது அச்சம் மற்றும் துஷ்பிரயோகத்தின் மீது கட்டப்பட்டதல்ல. அது, மரியாதை மற்றும் ஒற்றுமையின் மீது கட்டப்பட்டுள்ளது. நாம் அன்பு மற்றுமு் பன்முகத்தன்மை கொண்ட நாடு. சக இந்தியர்கள் குறிவைக்கப்படும்போது அதை பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்கும் ஒரு செயலிழந்த சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது. நமது நாடு என்னவாக மாற நாம் அனுமதிக்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

எனது எண்ணங்கள் சக்மா குடும்பத்தினருடனும், திரிபுரா மற்றும் வடகிழக்கு மக்களுடனும் உள்ளன. உங்களை எங்கள் சக இந்திய சகோதர சகோதரிகள் என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது? - திரிபுராவைச் சேர்ந்த அஞ்செல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மா ஆகிய இருவரும் டேராடூனில் உள்ள பிரேம்நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் பணி நிமித்தமாக கடந்த 9-ம் தேதி, சேலாகி என்ற இடத்துக்குச் சென்றிருந்தபோது அவர்களுக்கும் சில உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த உள்ளூர் இளைஞர்கள், அஞ்செல் சக்மா மற்றும் மைக்கேல் சக்மாவை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்செல் சக்மா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். அஞ்செல் சக்மா உயிரிழந்ததை அடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT