இடது: அலெக்ஸான்ட்ரோஸ் பபோராக்கிஸ் | வலது: ரந்தீர் ஜெய்ஸ்வால்
புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, அங்கு இந்தியர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் ஆரோராவில் உள்ள ஒரு இந்து கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாக 19 வயதான அலெக்ஸான்ட்ரோஸ் பபோராக்கிஸ் என்பவரை கடந்த 11-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். துப்பாக்கி செயலிழப்பு நவீன துப்பாக்கி, 300-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் உடல் கவசத்துடன் கோயிலுக்குச் சென்று தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்ட நிலையில், திடீரென துப்பாக்கி செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பபோராக்கிஸ் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததுடன், முழுமையான விசாரணை நடத்தி இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமெரிக்க அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுபற்றி கூறியதாவது: இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறையையும், இந்து எதிர்ப்பையும் கொண்டதாகக் கூறப்படும் இந்த சதித் திட்டத்தின் தன்மை மிகவும் கவலைக்குரியது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறி மனப்பான்மை மற்றும் இந்தியா எதிர்ப்பு வெறுப்புச் செயல்கள் குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முழுமையாக விசாரித்து, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.