சத்ருஜீத் கபூர்
சண்டிகர்: ஐபிஎஸ் அதிகாரி ஒய். புரன் குமாரின் மரணம் தொடர்பான சர்ச்சை காரணமாக, விடுப்பில் அனுப்பப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சத்ருஜீத் கபூரை காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஹரியானா அரசு விடுவித்துள்ளது.
சத்ருஜீத் கபூர் இல்லாத நேரத்தில் மாநில காவல்துறைத் தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்த ஓ.பி. சிங், மறு உத்தரவு வரும் வரை தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1992-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஓ.பி.சிங் டிசம்பர் 31-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், புதிய டிஜிபியை நியமிப்பதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஹரியானா அரசு அனுப்ப வாய்ப்புள்ளது.
1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சத்ருஜீத் கபூர், பஞ்ச்குலாவில் உள்ள ஹரியானா காவல்துறை வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பொறுப்பைத் தொடர்ந்து வகிப்பார் என்று அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான சத்ருஜீத் கபூர், ஆகஸ்ட் 2023-ல் மாநில காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎஸ் அதிகாரி ஒய்.புரன் குமாரின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்கள் அதிகரித்து வந்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி சத்ருஜீத் கபூர் விடுப்பில் அனுப்பப்பட்டார். அப்போது ஓ.பி.சிங்கிடம் டிஜிபி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
2001-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஒய். புரன் குமார் (52), அக்டோபர் 7-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த எட்டு பக்கக் கடிதத்தில், சத்ருஜீத் கபூர் உட்பட பல மூத்த அதிகாரிகள் மீது வெளிப்படையான சாதி அடிப்படையிலான பாகுபாடு, திட்டமிட்ட மனரீதியான துன்புறுத்தல், பொது இடத்தில் அவமானப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக, ஹரியானா அரசு முதலில் ரோத்தக் காவல் கண்காணிப்பாளர் நரேந்திர பிஜார்னியாவை இடமாற்றம் செய்தது, பின்னர் சத்ருஜீத் கபூரை விடுப்பில் அனுப்பியது.
புரன் குமாரின் மனைவி அம்னீத் பி. குமார் ஹரியானாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். அவர் தனது கணவரின் மரணம் குறித்து நீதி கிடைக்க வேண்டுமென முதல்வரிடம் நேரடியாக வலியுறுத்தினார்.
நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று சண்டிகர் காவல்துறையிடமிருந்து உறுதிமொழி பெற்ற பிறகும், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹரியானா அரசிடமிருந்து உறுதி பெற்ற பிறகும், புரன் குமாரின் மனைவி, ஐஏஎஸ் அதிகாரி அம்னீத் பி. குமார், மரணம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அவரின் பிரேதப் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தார்.