இந்தியா

“துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட போதை கும்பல் தலைவன் நவ்ப்ரீத் சிங் சிறையில் அடைப்பு” - அமித் ஷா

மோகன் கணபதி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களை இந்தியாவுக்கு தொடர்ந்து கடத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நவ்ப்ரீத் சிங், துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவனான நவ்ப்ரீத் சிங் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இதன்மூலம், மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

நவாப் விர்க் என்ற போலி அடையாளத்தைப் பயன்படுத்தி துருக்கி குடியுரிமைப் பெற்றிருந்த நவ்ப்ரீத் சிங், ஆப்கனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருட்களை தொடர்ந்து கடத்தி வந்தார்.

நமது புலனாய்வு அமைப்புகள் பல தடைகளைத் தகர்த்து, நவ்ப்ரீத் சிங்கை தேடிக் கண்டுபிடித்து, அவரது உண்மையான அடையாளத்தை வெளிக்கொண்டு அவரை நாடு கடத்தச் செய்துள்ளன.

நவ்ப்ரீத் சிங் இன்று (சனிக்கிழமை) இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அவர் மீதான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்.

ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல் கும்பலையும் டிசம்பர் 2029-க்குள் ஒழித்துக்கட்ட மோடி அரசு உறுதியுடன் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் அம்ரித்ஸர் நகரைச் சேர்ந்த நவ்ப்ரீத் சிங், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நவ்ப்ரீத் சிங் தேடப்பட்டு வந்தார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த இவரது குழுவைச் சேர்ந்த 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவ்ப்ரீத் சிங்கிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT