இந்தியா

எல்.முருகன் இடத்தில் ஹர்தீப் சிங் புரிக்கு வாய்ப்பு: ம.பி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக பரிந்துரை

ஆர்.ஷபிமுன்னா

புது டெல்லி: முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை உறுப்பினர் இடத்தில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து இடைக்கால எம்.பி பதவிக்கு அவரை பாஜக பரிந்துரைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் காலியான மாநிலங்களவை இடத்துக்கு, ஹர்தீப் சிங் புரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஹர்தீப் சிங் புரி மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக தனது மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, அதில் ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம்பெறவில்லை.

இதனால், ஹர்தீப் சிங் புரி மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், இப்போது ஹர்தீப் சிங் புரி மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம், அவர் அமைச்சரவையில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைக் கடிதத்தை பாஜக இன்று மதியம் வெளியிட்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்த எல்.முருகன், கடந்த அக்டோபர் 18 அன்று தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை எம்.பி பதவியையும் ராஜினாமா செய்தார்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருந்த அவர், தமிழ்நாட்டில் கட்சிக்காகப் பணியாற்ற விரும்புவதே தனது ராஜினாமாவுக்கான காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி தலைமையின் கீழ், பாரத அன்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் பணியாற்றியது தனது வாழ்நாளின் மிகப் பெரிய கவுரவம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு தினக்கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த தனக்கு, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் கூறினார்.

தற்போது, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 22 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு, பாஜக தனது வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை அறிவித்துள்ளது.

இந்த இடத்துக்கான வாக்குப்பதிவு நவம்பர் 12 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால், அதே நாளில் மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 16, 2026 ஆகும். இந்த இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரின் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2030 வரை நீடிக்கும்.

இந்த இடைத்தேர்தலுக்குத் தேவையான போதிய பலம் பாஜகவிடம் உள்ளது. அதேசமயம், வரவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலால் அமைச்சர் ஹர்தீப்சிங் புரிக்கு அளிக்கப்பட்ட மறுவாய்ப்பு, பாஜகவுக்கு பலன் தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT