புதுடெல்லி: அமெரிக்காவில் எச்-1 விசா அடிப்படையில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால், 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கி வரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, மெட்டா நிறுவனம் தனது முதலீடுகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திருப்பி உள்ளது. இந்நிலையில், சுமார் 8,000 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் எச்-1பி விசாவை நம்பியே உள்ளனர். தற்போதைய அமெரிக்க விதிகளின்படி, வேலையிழந்த 60 நாட்களுக்குள் புதிய ஸ்பான்சருடன் கூடிய வேலையைக் கண்டறிய வேண்டும்; தவறினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில், இரண்டு மாதங்களுக்குள் புதிய வேலை தேடுவது இந்திய ஊழியர்களுக்கு மிகக் கடுமையான சவாலாக மாறியுள்ளது.
கால அவகாசத்தை நீட்டிக்க பல ஊழியர்கள் தற்காலிகமாக 'விசிட்டர் விசா'வுக்கு (பி-2 விசா) மாற முயன்றாலும், தற்போதைய அமெரிக்க குடிவரவுத் துறை (யுஎஸ்சிஐஎஸ்) இந்த விண்ணப்பங்களை மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.
இதனால், அங்கு பல ஆண்டுகளாக வீடு வாங்கி, குடும்பத்துடன் வசித்து வரும் இந்தியர்கள், தங்களின் கிரீன் கார்டு கனவு கலைந்து ஒரே இரவில் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர் விசா அலைக்கழிப்புகள் மற்றும் ஏஐ-ஆல் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் காரணமாக, அமெரிக்காவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிபுணர்கள் மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அல்லது கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்குச் செல்வது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் வேலை வாய்ப்புக்கான சொர்க்கமாகப் பார்க்கப்பட்ட அமெரிக்கா, இன்று இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு தர்மசங்கடமான வாழ்வாதாரப் போராட்டக் களமாக மாறியுள்ளது.